குற்றம் செய்த இளையருக்கு சிறைத்தண்டனை

குற்றம் செய்த இளையருக்கு சிறைத்தண்டனை

1 mins read
f7a82fe2-c272-4618-803f-85af511f40be
-

நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம் சண்டையிட்ட சைக்கிளோட்டியைப் படமெடுத்தார் மற்றொரு வழிப்போக்கர். அதனால் சினமடைந்து அவரை முகத்தில் குத்திய சைக்கிளோட்டிக்கு நேற்று ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

28 வயது சிவகார்த்திக் பெர்னாட், அபாயகரமான வகையில் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அவருக்குத் தீர்ப்பு வழங்கும்போது, வேண்டுமென்றே காயப்படுத்துதல், துன்புறுத்தல் ஆகியவை தொடர்பான மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

பாதிக்கப்பட்ட 56 வயது ஆடவருக்கு முகத்தில் காயமேற்பட்டதுடன் கண்ணுக்கு அருகே எலும்பு முறிவும் கண்ணில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஜூலை 22ஆம் தேதி மாலை ஆறே முக்கால் மணியளவில் சிவகார்த்திக், ஹெண்டர்சன் ரோட்டின் புளோக் 96Aக்கு அருகே நடைபாதையில் சைக்கிளோட்டியதாகக் கூறப்பட்டது.

அவருக்கு முன்னே 63 வயது ஆடவர் ஒருவர் கைத்தொலைபேசியில் குரல்வழிச் செய்தியைக் கேட்டபடியே நடந்துகொண்டிருந்தார்.

சிவகார்த்திக் சைக்கிள் மணியை அடித்தும் முதியவரின் கவனத்தை ஈர்க்க இயலவில்லை. எனவே அவருக்கு நெருக்கமாக சைக்கிளை ஓட்டிக் கடந்ததால் சினமடைந்த முதியவருக்கும் சிவகார்த்திக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவரின் நெற்றியில் சிவகார்த்திக் குத்தியதில் ஆடவர் கீழே விழுந்தார்.

அவ்வழியே நடந்து சென்ற ஒருவர் இருவரையும் விலக்கிவிட முயன்றபோது மற்றொருவர் காணொளியில் அதைப் பதிவுசெய்தார். அதனால் கோபமடைந்த சிவகார்த்திக் படமெடுத்தவரைக் கடுமையாகத் தாக்கினார்.

தீர்ப்பில் சிவகார்த்திக்கால் தாக்கப்பட்ட முதிய ஆடவர்கள் இருவரின் மருத்துவச் செலவுக் கட்டணமான 1,017 வெள்ளியைச் செலுத்தும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டது.