கணக்கியல் மேலாளராகப் பணியாற்றிய சோ பாக் தோங், தான் வேலைசெய்த நிறுவனத்துக்குச் சொந்தமான 1.7 மில்லியன் வெள்ளியை முறைதவறிப் பயன்படுத்திய குற்றத்திற்காக நேற்று அவருக்கு ஆறு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடல்துறை நிறுவனமான 'பிஎஸ்ஏ டிரான்ஸ்போர்ட்டேஷனில்' பணியாற்றிய அவர் முன்னரே கையெழுத்திடப்பட்ட காசோலைகளை முறைதவறிப் பயன்படுத்தியதுடன் பொய்யான செலவுக் கணக்கு எழுதியதாகவும் கூறப்பட்டது.
2012ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில் அவர் இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 68 வயதாகும் சோ, சென்ற ஆண்டு மே மாதத்தில் தன் மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
1.1 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பொய்க் கணக்கு காட்டியதன் தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்கினார்.
தீர்ப்பு வழங்கும்போது அவர் மீதான மேலும் 13 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் கூறியது.
1992ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சோ, நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தொடர்பான நடைமுறைகளுக்குக் கையெழுத்திட அதிகாரபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர். மற்ற இருவரும் நிறுவன இயக்குநர்கள்.
நிறுவனத்தின் கணக்குப் பதிவேட்டை நிர்வகிக்கும் பொறுப்பும் சோவிடம் தரப்பட்டது.
2012ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து, தொகை எழுதாமல் இயக்குநர்கள் கையெழுத்திட்ட காசோலைகளில் தனக்கு விருப்பமான தொகையை நிரப்புதல், பொய்யான செலவுக் கணக்கு எழுதுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட சோ, 2019ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி கையும் களவுமாகப் பிடிபட்டார்.
நிலைமை கைமீறிப் போகவே, இயக்குநர்களை அவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்பட்டது.
அன்றே அவரைப் பணிநீக்கம் செய்த நிறுவனம், பின்னர் மறுநாள் காவல்துறையிடம் புகார் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

