மத்திய கிழக்கில் சீனாவும் இந்தியாவும் அவற்றின் ஆதிக்கத்தை அதிகரிக்க முனைந்துள்ள நிலையில் அவ்விரு நாடுகளுக்கும் இடையில் உரசல் ஏற்படலாம் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியிருக்கிறார்.
மத்திய கிழக்குக் கல்வி நிலையத்தின் வருடாந்தரக் கருத்தரங்கில் நேற்று அவர் உரையாற்றினார். மத்திய கிழக்கின் பங்காளித்துவத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா சீனா இரண்டுமே ஈடுபடுவதாகத் திரு டியோ குறிப்பிட்டார். சீனாவின் பெல்ட் அன் ரோட்' திட்டத்தில் ஏற்கெனவே வளைகுடா நாடுகளும் ஈரானும் இணைந்துள்ளன. இந்தியக் குடிமக்கள் வளைகுடா நாடுகளுக்குப் பெரிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்துள்ள நிலையில் இந்தியாவும் மத்திய கிழக்கில் அதிகக் கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.
ரஷ்யாவின் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்றதன்மை நிலவும் நிலையில், ஐரோப்பிய நாடுகளைப் போன்றே, இந்தியாவும் சீனாவும் மத்திய கிழக்குடன் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. சீன-இந்திய எல்லையில் அண்மையில் சர்ச்சை நிலவிய நிலையில், தற்போது மத்திய கிழக்கில் இரு நாடுகளுக்கும் போட்டியிடுவது அவற்றுக்குள் உரசலை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதை மூத்த அமைச்சர் சுட்டினார்.
மேலும், மத்திய கிழக்கும் ஆசியாவும் மூன்று அம்சங்களில் இணைந்து பணியாற்றலாம் என்றும் அவர் கூறினார். முதலாவது, நாடுகள் ஒருபக்கம் சாராமால், விதிமுறைகளின் அடிப்படையிலான, அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படையான, அனைத்துலகச் சட்டத்தையும் பரஸ்பர மரியாதை, நலனையும் மதித்து நடத்தல். இரண்டாவது, சிறிய நாடுகள் ஒன்றிணைந்து உலகளாவிய ஒழுங்குமுறையைச் சீரமைக்க உதவுதல். மூன்றாவது, ஆசியாவும் மத்திய கிழக்கும் அவற்றுக்கு இடையிலான புரிதலையும், மக்கள் நிலைப் பரிமாற்றங்களையும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுதல். குறிப்பாக இஸ்லாத்தின் நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியவை குறித்த மேம்பட்ட புரிதலை உலகெங்கும் உருவாக்கவும் இருதரப்பும் இணைந்து பணியாற்றலாம் என்று மூத்த அமைச்சர் டியோ கூறினார்.
மத்திய கிழக்கு நாடுகள் சமூக, சமய அளவிலான மாற்றம் தேவை என்பதைப் புரிந்துகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். நேற்று, மத்திய கிழக்குக் கல்வி நிலையத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற அரசதந்திரியுமான திரு பிலஹரி கௌசிகனுடன் கலந்துரையாடல் ஒன்றிலும் திரு டியோ பங்குகொண்டார்.
மத்திய கிழக்குக் கல்வி நிலைய கருத்தரங்கு இன்று நிறைவடையும்.

