மாதங்கி இளங்கோவன்
கொவிட்-19 நோயை உருவாக்கும் கிருமி தொடர்ந்து உருமாற்றம் அடையக்கூடியது என்பதால் ஓமிக்ரான் ரகக் கிருமியின் புதிய திரிபுகள் பற்றிய தகவல் ஆச்சரியம் அளிக்கக்கூடியது அல்ல என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருக்கிறார்.
'பிஏ.4', 'பிஏ.5' ரகக் கிருமிகள் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறியப்பட்டதை அவர் சுட்டினார்.
'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிட்ட அமைச்சர் பின்பு செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
மக்கள் தொகையில் மூத்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கையில் சிங்கப்பூரர்களின் உடல்நலத்தைப் பேணுவதற்கு புதிய திட்டங்கள் அவசியம் என உணர்ந்துள்ள சுகாதார அமைச்சு, அவர்களுடைய உடல் நலத்தைப் பாதுகாக்கும் முக்கிய குறிக்கோளோடு இவ்வாண்டு முதல் 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தை அமல்படுத்தவுள்ளது.
சிங்கப்பூரின் மருத்துவக் குழுமம், பொது மருத்துவர்கள், இடைநிலை, நீண்டகால மருத்துவச் சேவைகள், சமூகப் பங்காளிகள், பொதுமக்கள் என மொத்தம் ஐந்து வெவ்வேறு பங்குதாரர்களின் ஆதரவோடு சுகாதார அமைச்சு 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தை ஏற்பாடு செய்துவருகின்றது.
மே 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பொதுமக்களின் ஆலோசனைகளைச் சேகரிக்கும் சுகாதார அமைச்சு, அவற்றுக்கு ஏற்ப எவ்வாறு 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தில், மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் சில உத்திகளை அறிமுகப்படுத்தலாம் என தீர்மானிக்க விரும்புகின்றது. சேகரிக்கப்பட்ட கருத்துகள் புதிய வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படுவதுடன் நாடாளுமன்றத்தில் இவ்வாண்டு விவாதிக்கப்படும்.
இந்தப் பொது ஆலோசனைகளில் கலந்துகொள்ள மக்கள் www.healthiersg.gov.sg இணையப் பக்கத்தை அணுகலாம்.
பொதுமக்கள் நீண்ட கால அடிப்படையில் ஒரே பொது மருத்துவரைப் பார்க்கச் சென்றால் அவர்களுக்கு பல்வேறு பயன்கள் உள்ளன என மருத்துவர்கள் தம்மிடம் கூறியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு குடும்பமும் ஒரே பொது மருத்துவரை அணுகினால் அவர்களுக்கு சரியான சுகாதாரத் திட்டத்தை தயாரிப்பதோடு, சில ஆண்டுகளுக்கு அவர்களுடைய உடல்நலத்தைக் கண்காணிக்க மருத்துவர்களுக்கு அது ஏதுவாக இருக்கும்," என்றார் அமைச்சர் ஓங்.
ஈராண்டுகளுக்கு தொடர்ந்து 'எ மெடிக்கல் கிளினிக்'கிலுள்ள மருத்துவர் லிம் ஹொங் ஷென் னிடம் மருத்துவ ஆலோசனை பெறவிருக்கிறார் 77 வயது திருமதி லோகாம்பாள் வெங்கடாசலம்.
நீரிழிவு நோயாளியான இவர் மற்ற காரணங்களால் உடல்நலம் குன்றினால் மருத்துவர் லிம்மை அணுகும்போது, லோகாம்பாளின் உடல்நல வரலாறு தெளிவாகத் தெரிவதால் உடனடியாக அவருக்கு உகந்த ஆலோசனையைத் தந்து தேவையான மருந்து மாத்திரைகளை மருத்துவர் லிம் அளிப்பதாகக் கூறினார்.
தமது குடும்பத்தினரும் பேரப்பிள்ளைகளும் உடல் நலம் பாதிக்கப்படும்போது சிகிச்சைக்கு மருத்துவர் லிம்மையே நாடுவதாகப் பகிர்ந்துகொண்டார் லோகாம்பாள்.

