தேசியப் பல்கலைக்கழக பலதுறை மருந்தகங்களில் மேலும் மூன்று அடுத்த ஆண்டில் இருந்து மனநல சிகிச்சையும் முதியோருக்கான சிறப்புச் சேவைகளையும் வழங்கவிருக்கின்றன.
மன உளைச்சல், கவலை போன்ற மிதமான மனநலப் பிரச்சினைகளுடன் தூக்கமின்மை போன்ற முதியோருக்கான சிக்கல்களுக்கும் இவற்றில் சிகிச்சை வழங்கப்படும்.
மருத்துவமனைகளில் அதிகரிக்கும் வேலைப்பளுவைக் குறைப்பது இதன் நோக்கம்.
சென்ற ஆண்டு செயல்படத் தொடங்கிய புக்கிட் பாஞ்சாங் பலதுறை மருந்தகத்தில் எதிர்வரும் அக்டோபருக்குள் 'ஹெல்த் அன் மைண்ட் கிளினிக்' எனும் மருந்தகம் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் தலைவர் டாக்டர் பெஞ்சமின் சியா செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சுவா சூ காங் பலதுறை மருந்தகத்துக்கும் கிளமெண்டி பலதுறை மருந்தகத்திற்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஏற்கெனவே ஜூரோங், பயனியர், புக்கிட் பாத்தோக், குவின்ஸ்டவுன் ஆகிய பலதுறை மருந்தகங்களில் இத்தகைய 'ஹெல்த் அன் மைண்ட் கிளினிக்' மருந்தகங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில், முதியோர் பிரச்சினைகளுக்கான சிகிச்சைத் திட்டத்தையும் விரிவுபடுத்தத் திட்டமிடப்படுகிறது.
மூத்தோர் உடல் வலுவிழத்தலை முன்கூட்டியே அடையாளம்கண்டு அதற்கான சிகிச்சையை வழங்குவதற்கு பலதுறை மருந்தக மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இன்று உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் கட்டமைப்பு இந்தத் தகவல்களை நேற்று வெளியிட்டது.
2016ஆம் ஆண்டு சமூக மனநலத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஏறக்குறைய 200 பொது மருத்துவர்கள், பலதுறை மருந்தக மருத்துவர்கள், சமூகப் பங்காளிகளுக்கு மனநலப் பிரச்சினை கொண்டோரைக் கையாளப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 4,500க்கும் அதிகமானோருக்கு அவர்கள் சேவை வழங்கியுள்ளனர்.
வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜூரோங், பயனியர் பலதுறை மருந்தகங்கள் முதியோர் உடல்நலப் பிரச்சினைகளுக்கான சிறப்புச் சேவையை வழங்கவிருக்கின்றன.
பலதுறை மருந்தகங்களில் மனநல, முதியோர் மருத்துவச் சேவைகளை நாடுவோர் மூன்று வேலை நாள்களுக்குள் மருத்துவரைப் பார்க்க நேரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

