செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c1038f70-ce08-4483-983f-7c746ec1b2b4
-

தீச்சம்பவத்தில் அண்டை வீட்டாருக்கு உதவிய 14 வயதுச் சிறுவன்

உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் செங் பிங் பெங்கிற்கு வயது 14. பிடோக் நார்த் அவென்யூ 2ல் உள்ள புளோக் 409ன் ஐந்தாம் தளத்தில் உள்ளது இவரது வீடு. இம்மாதம் 13ஆம் தேதி காலை ஆறரை மணியளவில் வீட்டில் கரும்புகை சூழவே, கீழ் மாடியில் உள்ள வீடு தீப்பற்றிக்கொண்டதை உணர்ந்தனர் பெற்றோரும், சிறுவனும்.

காலணிகூட அணியாமல், புகையை அதிகமாகச் சுவாசித்தால் என்ன ஆகும் என்றும் யோசிக்காமல் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி வெளியேறும்படி எச்சரித்தார் பிங் பெங்.

"திரைப்படங்களில் புகையைச் சுவாசிப்பவர்கள் மூச்சுத் திணறுவதுபோலப் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் மூச்சிழுக்கும்போது கடுமையான வலியை உணர்ந்தேன்; ஒவ்வொருமுறை மூச்சை இழுக்கும்போதும் அது மோசமடைந்தது," என்று பிங் பெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

ஐந்தாம் மாடி முதல் 11ஆம் மாடி வரை சிறுவன் ஓடிச் சென்று அனைவரையும் எச்சரித்ததாகக் கூறப்பட்டது. அண்டைவீட்டார் பலரும் சிறுவனுக்கு நன்றி தெரிவித்த வேளையில், தொடர்பு, தகவல், தேசிய வளர்ச்சி துணையமைச்சர் டான் கியாட் ஹாவ், ஃபேஸ்புக்கில் சிறுவனின் துணிச்சலைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

$1.28 பி. கூட்டு விற்பனைக்கு தயாராகும் 'கென்சிங்டன் பார்க்'

சிராங்கூன் கார்டன் பகுதியில் அமைந்திருக்கும் 'கென்சிங்டன் பார்க்' கூட்டுரிமை வீடுகளின் கூட்டு விற்பனை தொடர்பில் பொது ஏலக் குத்தகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

999 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமை உள்ள இந்த குடியிருப்பு இடத்தை, சதுர அடிக்கு $1,371 என்ற அடிப்படையில் விற்க உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

2018ல் அவர்கள் எதிர்பார்த்த தொகையைக் காட்டிலும் இது அதிகம் என்று கூறப்பட்டது.

மொத்தம் 491,000 சதுர அடி நிலம் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.