மலேசியத் தொழிலதிபர் லிம் கோக் தாய்க்குச் சொந்தமான 'ரிசார்ட்ஸ் வோர்ல்ட் க்ரூசஸ்' எனும் நிறுவனம் ஜூன் 15ஆம் தேதியில் இருந்து சிங்கப்பூரில் 'ஜென்ட்டிங் ட்ரீம்' சொகுசுக் கப்பலை இயக்கவிருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் நொடித்துப் போன 'ஜென்ட்டிங் ஹாங்காங்' நிறுவனத்தில் வேலைசெய்த ஏறக்குறைய 1,600 ஊழியர்களை அது மீண்டும் வேலைக்கு எடுக்கவிருக்கிறது. ஏற்கெனவே விற்பனை, ஹோட்டல் செயல்பாடுகள் பிரிவில் வேலை செய்த 100 பேரில் 70 பேரை அது வேலைக்குச் சேர்த்துள்ளதாகக் கூறப்பட்டது.
சொகுசுக் கப்பல் பயணங்களுக்கான முன்பதிவு https://rwcruises.com என்ற இணையத்தளத்தில் நேற்று தொடங்கியது.
'வோர்ல்ட் ட்ரீம்ஸ்' சொகுசுக் கப்பல் பயணம் ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட, ரத்தான பயணங்களுக்குச் செலுத்தப்பட்ட தொகைக்கு ஈடான பற்றுப் புள்ளிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
'ரிசார்ட்ஸ் வோர்ல்ட் க்ரூசஸ்' நிறுவனத்தின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கும். ஆசியாவில் முன்னிலை சொகுசுக் கப்பல் நடுவமாக சிங்கப்பூரை உருவாக்க அது முனையும்.

