திறன் பயிற்சிகள் அளிப்பதும் தகுதிக்கு ஏற்ற வேலையில் அமர்த்துவதும் இந்தோனீசியாவில் உள்ள கெண்டால் தொழிலியல் பேட்டையின் வெற்றிக்கு முக்கியம் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ள திரு வோங், நேற்று 2,700 ஹெக்டர் பரப்பளவுடைய கெண்டால் தொழிலியல் பேட்டையைப் பார்வையிட்டார்.
சிங்கப்பூரின் 'செம்ப்கார்ப் டிவலப்மண்ட்' மற்றும் இந்தோனீசியாவின் தொழிலியல் நிலச்சொத்து மேம்பாட்டாளரான 'ஜபபேகா' இரண்டுக்கும் இடையே வர்த்தக ஒத்துழைப்பாக 2016ல் தொடங்கியது இன்று இரு நாடுகளின் அணுக்கமான பொருளியல் ஒத்துழைப்பாக மாறியுள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர், இந்தோனீசியாவின் இந்தக் கூட்டு முயற்சி வளர்ச்சி காண, வேலை தேடுதலுக்கான இணையவாசல் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. உள்ளூர் திறனாளர்களை ஈர்ப்பதே இந்தத் தளத்தின் நோக்கமாகும்.
இதைப் பாராட்டிய திரு வோங், "முதலீட்டாளர்களிடையே இதனால் நம்பிக்கை உண்டாகும். இங்கு வரும் முதலீட்டாளர்களுக்கு ஊழியர்கள் தேவை. அதனால் திறன்கள், பயிற்சிகள், தகுதிக்கு ஏற்ற வேலைகள் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதை முதலீட்டாளர்கள் அறிந்தால், கெண்டாலில் முதலீடு செய்யும் நம்பிக்கையைப் பெறுவர்," என்றார் அமைச்சர்.
இதற்கிடையே, அனைத்துலக கொள்கலன் துறைமுகம் ஒன்றை சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் இணைந்து கட்டும் திட்டத்தில் உள்ளதாகவும் திரு வோங் நேற்று அறிவித்திருந்தார்.

