கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் நம் முகத்தின் கீழ்ப்பகுதியை முகக்கவசத்தால் மூடி மறைக்கத் தொடங்கினோம். ஆனால், இவ்வாறு கட்டாயமாக முகக்கவசம் அணியும் நடைமுறை ஒரு சிலருக்குச் சாதகமற்ற நிலையை ஏற்படுத்தியது.
செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் பேச்சு சிகிச்சைக்குச் சென்றாலும் அங்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர் பேசுவதைத் தெளிவாக அறிந்திட முகக்கவசம் ஒரு தடையாக இருந்தது.
ஆனால், இப்போது செங்காங் பொது மருத்துவமனை முன்னோடித் திட்டமாகத் தொடங்கியுள்ள புதிய முகக்கவசத்தில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய திரை ஒன்று இருப்பதால், ஒருவரது வாய் அசைவுகளைக் கவனிக்க எளிதாக இருக்கும்.
பனி படராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திரையை உடைய இந்த முகக்கவசங்கள், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் சிங்கப்பூரின் வெவ்வேறு சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களில் உள்ள பொது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும்.
சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களும் நோயாளிகளும் அவரவர் வாய் அசைவுகளை மேலும் எளிதாகக் கவனித்திட இந்த முகக்கவசங்கள் உதவும் என்று 'ஏஸ்டார்' நிறுவனம், செங்காங் பொது மருத்துவமனை மற்றும் உள்ளூர் முகக்கவச நிறுவனம் ஃபாரவர் ஃபேமிலி' நேற்று தெரிவித்தன.
மூன்று தரப்புகளும் கடந்த ஆண்டு முற்பாதியிலிருந்து இந்த முகக்கவசங்களைக் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன.
பல இடங்களில் முகக்கவசம் அணிவது இன்னமும் கட்டாயமாக இருப்பதால் இத்தகைய முகக்கவசங்கள், நோயாளியுடன் இருக்கும் சூழல்களில் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற இடங்களில் பேச்சு சிகிச்சையை மேற்கொள்ளும் நிபுணர்கள் தங்களின் பணியை மேலும் எளிதாக ஆற்ற முடியும்.
இவ்வகை முகக்கவசங்களை வாங்க விரும்புவோர், 55 வெள்ளிக்குப் பத்து முகக்கவசங்களைக் கொண்ட ஒரு பெட்டியை 'ஃபாரவர் ஃபேமிலி'யின் இணையத்தளத்தின் வழி வாங்க முடியும்.

