'செங்காங் நகர மன்ற ஏலக்
குத்தகையில் பங்கேற்க முடியாத நிலை'
செங்காங் நகர மன்றத்தைத் தற்போது நிர்வகித்து வரும் முகவரான 'இஎம் சர்விசஸ்', அதன் ஒப்பந்தக் காலத்தை அடுத்த ஆண்டுடன் முடித்துக்கொள்கிறது. மனிதவள தட்டுப்பாட்டால் செங்காங் நகர மன்றத்துக்கான ஏலக்குத்தகையில் பங்கேற்க முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக 'இஎம் சர்விசஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி கூ தெரிவித்தார்.
நகர மன்றத்தை நிர்வகிப்பதற்குப் பலர் தேவைப்படுவார்கள் என்றும் ஊழியர் சந்தை தற்போது நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் தேவையான திறன்களுடைய சரியான நபர்களைக் கண்டறிவது சிரமம் என்றும் அவர் கூறினார். அதனால் இந்த ஏலக்குத்தகையில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. நிர்வாக முகவரை நியமிப்பதற்காக ஏப்ரல் முதல் தொடங்கிய மூன்று வார ஏலக்குத்தகையில் ஒரு ஏலம்கூட சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், மொத்த செங்காங் வட்டாரத்தையும் அடுத்த ஆண்டு முதல் தானே நிர்வகிக்க உள்ளதாக செங்காங் நகர மன்றம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் கீழ் இயங்கும் நகர மன்றங்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் இவை என்று ஒரு சாரார் கூறினாலும் கட்டணம், மனிதவளம், கால அவகாசம், தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு அம்சங்களைக் கருதிய பின்னரே ஏலக்குத்தகையில் பங்கேற்க முடியும் என்று திரு கூ குறிப்பிட்டார்.
நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை
உறுதிப்படுத்த சிங்கப்பூர் திட்டம்
சிங்கப்பூருக்குத் தற்போது 'எல்என்ஜி' எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்கி வரும் நான்கு உற்பத்தி நிறுவனங்களுடன் மேலும் இரண்டு நிறுவனங்களை நியமிக்க சிங்கப்பூர் திட்டமிடுகிறது. அனைத்துலக எரிசக்திக் கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை இது உறுதிப்படுத்தும். சிங்கப்பூருக்கு எரிசக்தி வழங்குவதற்கான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி சந்தை ஆணையம் நேற்று தெரிவித்தது.
எரிசக்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு இதற்கான உரிமத்தை ஆணையம் வழங்கி வருகிறது. நம்பிக்கையான, பாதுகாப்பான, போட்டித்தன்மையுடைய எல்என்ஜி விநியோகத்தை சிங்கப்பூருக்கு வழங்கும் தகுதியின் அடிப்படையில் புதிதாக இரண்டு நிறுவனங்கள் நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான திட்டங்கள் ஜூலை 8ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் மூலம் போட்டித்தன்மை அதிகரிப்பதுடன் எரிசக்தியை வாங்குவோருக்குக் கூடுதல் தெரிவுகள் இருக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

