ஒரு தலைமுறையில் ஏற்படக்கூடிய கொவிட்-19 கொள்ளைநோய், உலக விமானத் துறையை ஏறக்குறைய பேரழிவுக்குத் தள்ளிவிட்டது.
இருந்தாலும் உடனடியாகச் செயல்படுவது, தாக்குப்பிடித்து, உயிர்பிழைத்து, போதுமான நிதியைத் திரட்டுவது போன்ற மதிப்புமிக்க பாடங்களை அந்நோய் கற்றுத் தந்துள்ளது என்று கடந்த இரண்டு ஆண்டு அனுபவங்களை நேற்று பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்சின் தலைமை நிர்வாகி கோ சூன் போங் தெரிவித்தார்.
"2091ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வர்த்தகத்தை உருமாற்றும் திட்டத்தின் முதல் கட்டத்தில் இருந்தோம். அப்போது சாதனை அளவு பயணிகளைக் கொண்டிருந்தோம். சாதனை அளவு லாபத்தை அடைந்திருந்தோம். எல்லாேம சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால் 2020ஆம் ஆண்டின் ஜனவரியில் எல்லாமே தலைகீழாக மாறி சீர்குலைந்தது," என்று திரு கோ கூறினார்.
"2020 ஏப்ரலில் கொவிட்-19க்கு முந்தைய நிலையில் 18 இடங்களுக்கான விமானச் சேவையில் மூன்று விழுக்காடு மட்டுமே இயக்க முடிந்தது. மாதத்திற்கு 300 மில்லியன் வீதம் பணம் வீணாகிக் கொண்டிருந்தது. வருமானம் அடிமட்டத்துக்குச் சரிந்தது. பங்குதாரர்கள் நிதி திரட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.
"2020 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இன்று வரை குழுமம் $22.4 பில்லியன் நிதியைத் திரட்டியுள்ளது.
"இதில் பங்குதாரர்களின் 15 பில்லியன் நிதியும் அடங்கும். இதுவரை பயன்படுத்தாத கடன் மூலம் 2.1 பில்லியன் ெவள்ளியை கூடுதலாக எஸ்ஐஏ திரட்டியது. ஒரு போதும் இப்படி பல வளங்களிலிருந்து நாங்கள் நிதி திரட்டியதில்லை," என்று திரு கோ நினைவு கூர்ந்தார். "அதே சமயத்தில் பல்வேறு பாடங்களை கற்றுக்கொள்ள கொள்ளைநோய் வாய்ப்பாக அமைந்தது," என்றார் அவர்.
"இது போன்று மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். ஆனால் அப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். முழு அனுபவமும் எங்களை இன்னமும் சுறுசுறுப் பாகவும் தாக்குப்பிடிக்கக்கூடிய வகையில் செயல்பட வைத்துள்ளது," என்று திரு கோ மேலும் தெரிவித்தார். 2022 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக $962 மில்லியன் நட்டம் ஏற்பட்டதாக கடந்த புதன்கிழமை எஸ்ஐஏ தெரிவித்தது.
இது, கடந்த ஆண்டு ஏற்பட்ட $4.3 பில்லியன் இழப்பைவிடக் குறைவு. கடந்த ஆண்டு பிற்பகுதியில் பயணங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியதால் வருமானம் $3.8 பில்லியனிலிருந்து $7.6 பில்லியனுக்குக் கூடியது. சரக்குகளுக்கான சேவையில் லாபம் இரண்டு மடங்கு கூடியதால் ஒட்டு மொத்த நட்டமும் $1.1 பில்லியன் என பாதியாகக் குறைந்தது.

