மாதங்கி இளங்கோவன்
தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் மே தின விருதுகள், நேற்று ஃபேர்ேமான்ட் சிங்கப்பூரில் நடந்தது. மொத்தம் 149 தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்பு பங்காளிகள், முன்மாதிரி ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கும் இவ்விழா, இவ்விருதுகளின் வரலாற்றி லேயே இவ்வாண்டு ஆக அதிகமானவர்கள் கௌரவப்படுத்தப் பட்டுள்ளனர்.
முதலாளிகள், தொழிலாளர் சங்கம், அரசாங்கம் உள்ளிட்ட முத்தரப்பில் ஊழியர்கள் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று தொழில் அனுபவமுள்ள பாப் டான் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைசிறந்த சேவைக்கான (நட்சத்திரம்) விருதை பெற்ற திரு டான், தொழிலாளர் சங்கத்திற்கு செய்த சேவைகளுக்கும் 'என்டியுசி கிளப்' நிர்வாக மன்றத்துக்கு பங்களித்ததற்காகவும் இவ்விருதை பெற்றுள்ளார்.
ஆஸ்காட் பிசினஸ் டிரஸ்ட், செந்தோசாத்தீவு மேம்பாட்டு கூட்டு நிறுவனம் மற்றும் எஸ்பிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் அவர் தலைவராக இருந்துள்ளார்.
திரு டான், தேசிய தொழிற்சங்கத்தில் சுமார் 30 ஆண்டுகள் பங்களித்ததோடு டவுன்டௌன் ஈஸ்ட், 'வைல்ட் வைல்ட் வெட்' போன்ற பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் உதவினார். சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் உதவித் தலைவராகவும் அவர் 15 ஆண்டுகள் பணி புரிந்தார்.
சுமார் 500க்கும் மேற்பட்டோர் மே தின விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சக ஊழியர்களுக்கும் நண்பர்களுக்கும் முத்தரப்பு பங்காளிகளுக்கும் ஆதரவளித்தனர். தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவர் மேரி லியவ், தலைமைச் செயலாளர் இங் சீ மெங் ஆகிய இருவரும் இவ்விருதளிக்கும் விழாவை முன் நின்று நடத்தினர்.
தொழிற்சங்கத் தலைவர்கள், தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களுடைய வேலை வாய்ப்புகளைத் தக்கவைப்பதோடு அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.
அவ்விதத்தில் 22 ஆண்டு களுக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தின் அங்கமான 'சேட்ஸ்' ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் கோவிந்தன் சதாசிவமும், 53, தமது நிறுவனத்தின் ஊழியர்களுடைய வேலைவாய்ப்புகளை பாதுகாக்க பலதரப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட விமானத் துறையில் வேலைகளை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் இருந்தவர்களுக்கு திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். இவருடைய பங்கிற்கும் ஊழியர்களுக்கு முக்கியத்துவமளிக்கும் மனப்பான்மைக்கும் என்டியுசியின் தொழிலாளர் தோழர் விருது வழங்கப்பட்டது.
இவரைப்போல தொழிலாளர் தோழர் விருதைப் பெற்ற அலமேலு பாலையா, 52, "எனது பங்களிப்பிற்காக இவ்விருதை பெருவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இவ்விருது, என் சக ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இன்னும் அதிக ஊக்கமளிக்கின்றது," என்றார்.
சிங்கப்பூர் நகரச் சீரமைப்பு ஆணையத்தின் தொழிலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான அலமேலு, தொழிலாளர் இயக்கத்தில் தொடர்நது ஊழியர்களுக்கு உதவும் மாற்றங்கள் வரவேற்கப் படுவதாகக் கூறினார்.
உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பங் கின் கியோங், மறைந்த ரிச்சர்ட் மேக்னஸ் உட்பட 12 தனிப்பட்டவர்களுக்கும் நான்கு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

