இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து இணையம் வழியாக வீசப்பட்ட மோசடி காதல் வலையில் குறைந்தது 380 பேர் சிக்கி சுமார் 15 மில்லியனை இழந்துள்ளனர்.
காதல் வலை வீசும் மோசடிக்காரர்கள் சமூக ஊடகங்கள் வழியாக பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பை ஏற்படுத்தி உறவை வளர்த்துக் கொள்கின்றனர் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.
பெரும்பாலான சம்பவங்களில் மதிப்புமிக்க பரிசுப் பொருளை அனுப்பி வைத்ததாக மோசடிக் காரர்கள் கூறுகின்றனர். அதன் பிறகு பொருட்களை விநியோகிக்கும் நிறுவனத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு வரும். அப்போது அவருக்கு வந்த பொருளை அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதாக அந்த அழைப்பு தெரிவிக்கும். இந்தப் பொருளை விடுவிக்க வேண்டுமானால் இணையம் வழியாக மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படும். மற்றொரு முறையில் நிதி உதவி கேட்டும் மோசடிகள் இடம்பெறுவதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
பாதிக்கப்பட்டவர்கள், சிங்கப்பூர் சுங்கத் துறையை தொடர்புகொண்டு விநியோகக் கட்டணம் குறித்து விசாரிக்கும்போதோ, சந்தேகம்அடைந்து காவல்துறையுடன் தொடர்புகொண்டு அது பற்றி கேட்கும்போதே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொள்கின்றனர்.
2020ஆம் ஆண்டில் 822 இணையக் காதல் மோசடிகள் நடந்துள்ளன. இது, 2011ல் பதிவான 62 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 13 மடங்கு அதிகம். இந்த நிலையில் இணையம் வழியாக முன்பின் அறிமுகமில்லாதவர்கள் பழகினால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். முன்பின் ெதரியாத நபர்களுக்கோ நேரில் சந்திக்காதவர்களுக்கோ பணம் அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் ெகாண்டனர்.

