வீட்டுவேலைகளை மட்டும் செய்ய வேண்டிய தமது இல்லப் பணியாளரை தமது பேக்கரி கடையில் வேலை செய்யச் சொன்னார் மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தவாசியுமான மாது.
அந்தக் கடையில் இருந்த நறுக்குவதற்கான மின்சாரக் கருவியை பயன்படுத்தியபோது பணியாளர் திருவாட்டி ரபியா பஹரூதின் அப்துலின் வலது கையில் எல்லா விரல்களும் துண்டிக்கப்பட்டன.
மஸ்துரா அப்துல் காலில், இல்லப் பணியாளரை பேக்கரி கடையில் வேலை செய்ய வைத்தது இது முதன்முறை இல்லை.
ஏற்கெனவே அவர் ஒரு முறை தமது முந்தைய இல்லப் பணியாளரை அதே போல கடையில் வேலை செய்ய வைத்தார்.
அப்போதும் அந்த இல்லப் பணியாளருக்கு விரல்களில் காயம் ஏற்பட்டது. அவரும் நறுக்கும் மின்சாரக் கருவியை பயன்படுத்தி இருந்தார்.
வெளிநாட்டு ஊழியர் வேலைச் சட்டத்தின்கீழ், 46 வயது மஸ்துராவுக்கு நான்கு வார சிறைத் தண்டனையும் 10,400 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
அதே சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்ட மஸ்துராவின் கணவர் அஃபென்டி பி. ஹுசேனுக்கு 8,700 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அவரது பெயரைக் கொண்டுதான் திருவாட்டி ரபியா இல்லப் பணியாளராக வேலைக்கு அமர்த்தப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி ரபியாவின் வேலையிடப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய அஃபென்டி, மஸ்துரா இருவரும் சுற்றுச்சூழல் பொதுச் சுகாதாரச் (உணவுச் சுகாதாரம்) சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.


