ஏப்ரலில் எல்லா கொவிட்-19 சம்பவங்களும் ஓமிக்ரான் வகையைச் சேர்ந்தவை
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் பதிவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமிருந்து பதிவான கொவிட்-19 சம்பவங்கள் அனைத்தும் ஓமிக்ரான் வகை தொற்றுச் சம்பவங்கள் என்று சுகாதார அமைச்சு கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது.
அந்த உள்ளூர் சம்பவங்களில் 99 விழுக்காட்டில் BA.2 திரிபுகள், BA.2.12.1. துணைத் திரிபுகள் தென்பட்டன என்றும் எஞ்சிய ஒரு விழுக்காட்டு சம்பவங்களில் BA.1 துணைத் திரிபுகள் தென்பட்டன என்றும் அமைச்சு விவரித்தது.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமிருந்து பதிவான கொவிட்-19 சம்பவங்களில் 98 விழுக்காட்டில் BA.2 துணைத் திரிபுகள், ஒரு விழுக்காட்டு சம்பவங்களில் BA.1 துணைத் திரிபுகள், ஒரு விழுக்காட்டு சம்பவங்களில் XJ, XE இணைத் திரிபுகள் இருந்தன.
கடந்த வியாழக்கிழமை, சிங்கப்பூரில் 4,578 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. புதன்கிழமையன்று பதிவான சம்பவங்கள் 6,442.
துணைப் பிரதமர் ஹெங்: கொவிட்-19 குடும்பங்களை ஒன்றிணைத்தது
கொவிட்-19 பெருந்தொற்று பலரது மரணங்களுக்குக் காரணமாக இருந்தது. பவரது வாழ்வாதாரங்களைப் பெருமளவில் பாதித்தது. இருந்தாலும் அது பல குடும்பங் களை ஒன்றிணைத்துள்ளது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
"என்னைப் பொறுத்தவரையில், நீண்டகாலத்துக்குப் பிறகு நான் என் மனைவியுடனும் பிள்ளைகளுடனும் ஒன்றாக அமர்ந்து பல சந்தர்ப்பங்களில் உணவருந்தி இருக்கிறோம்," என்றார் திரு ஹெங்.
"வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் வேளையில், குடும்ப அமைப்புமுறையில் முக்கிய மாற்றங் களைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துக்கொண்டு அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பெருந்தொற்று குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்தி உள்ளது," என்றும் அவர் விவரித்தார்.
திருமணம் புரிந்துகொள்வோர் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் சரிந்துள்ளது. தம்பதியர் குறைவான பிள்ளை களைப் பெற்றுக்கொள்கின்றனர். தம்பதியருள் அதிக விகிதத்தினர் திருமண பந்தத்தை முன்கூட்டியே முறித்து கொள்கின்றனர்.
சமுதாயம் வெளிப்படையாகவும் மாறுபட்டதாகவும் உருமாறியுள்ளது. குடிமக்கள் திருமணங்களில் மூன்றில் ஒன்று வெளிநாட்டு வாழ்க்கைத் துணை சம்பந்தப்பட்டதாக வும் ஐந்தில் ஒன்று கலப்புத் திருமணமாகவும் உள்ளது. வலுவான குடும்பங்களை ஆதரிக்கும் அதேவேளையில், சில குடும்பங்களின் மாறிவரும் தேவைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் துணைப் பிரதமர் கூறினார்.
நமது சமூகத்தின் மிக முக்கிய அடித்தளம் வலுவான குடும்பங்களே என்று திரு ஹெங், நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஃபோக்கஸ்' எனும் உள்ளூர் நன்கொடை அமைப்பின் 20ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பேசியபோது வலியுறுத்தினார்.
எஸ்எம்யு மாணவர்கள் 2023 முதல் முக்கிய பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் (எஸ்எம்யு) சேரும் மாணவர்கள் 2023ஆம் ஆண்டு முதல் பல நூற்றுக் கணக்கான பாடப்பிரிவுகளில் இருந்து தங்களின் முக்கியப் பாடங்களைத் தேர்வு செய்யலாம். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 100 புதிய மாணவர்களை சேர்க்கும் புதிய ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான திட்டங்களை நேற்று அது அறிவித்தது.
உள்ளூர் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய திட்டத்தின்மூலம், இந்த இளங்கலை பட்டதாரி களுக்கு ஒரு தனிப்பட்ட பிரதான பாடத்திட்டம் இருக்கும். எஸ்எம்யுவின் ஆறு துறைகள் சார்ந்த பள்ளிகளில் உள்ள அனைத்து பாடத் தொகுதிகளையும் அவர்கள் தேர்ந்தெடுக் கலாம். அவை கணக்கியல், வணிகம், பொருளியல், கணினி மற்றும் தகவல் அமைப்புகள், சட்டம் மற்றும் சமூக அறிவியல்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருங்கிணைந்த கல்வியில் அவர்கள் இளங்கலைப் பட்டம் பெறுவார்கள்.

