திமோர் லெஸ்டேயின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹோசே ராமோஸ் ஹோர்டாவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சிங்கப்பூரைப் பிரதிநிதித்து வெளியுறவு இரண்டாம் அமைச்சர் முகமது மாலிக்கி ஒஸ்மான் அந்நாட்டு தலைநகர் திலிக்கு நேற்று சென்றுள்ளார்.
அதிபர் ராமோஸ் ஹோர்டா, பிரதமர் தவுர் மட்டான் ருவாக், கல்வி அமைச்சரும் இளையர், விளையாட்டு அமைச்சருமான அர்மிண்டோ மையா ஆகியோரை டாக்டர் மாலிக்கி சந்தித்து பேச்சு நடத்தினார்.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அடல்ஜிசா மெக்னோ, டாக்டர் மாலிக்கிக்கு பகல் விருந்தளித்தார்.
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், திமோர் லெஸ்டேயின் அதிபருக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை டாக்டர் மாலிக்கி, அதிபர் ராமோஸ் ஹோர்டாவிடம் வழங்கினார்.
அதிபர் ஹலிமா தமது கடிதத்தில், "கடந்த 20 ஆண்டுகளாக திமோர் லெஸ்டே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது," என்று கூறினார். மேலும் திரு ராமோஸ் ஹோர்டாவின் தலைமையில் நாடு தொடர்ந்து முன்னேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு சிங்கப்பூருக்கும் திமோர் லெஸ்டேவுக்கும் இடையே அரசதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்றும் அதிபர் ஹலிமா குறிப்பிட்டார்.

