சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் பிற பசிபிக் கூட்டணி நாடுகள், புதிய பசிபிக் கூட்டணி-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் விவாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவை அடங்கும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
"இப்போது நம்மிடம் பசிபிக் கூட்டணி-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. அதில் சிங்கப்பூர் முதலாவது இணை உறுப்பினர். முதற்கட்டமாக நாம் மெக்சிகோவுடனும் பசிபிக் கூட்டணி நாடுகளுடனும் தொழில்நுட்பம் மற்றும் மின்னிலக்கமயம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, இணைப்பு மற்றும் தளவாடம், மக்கள் பரிமாற்றம் என நான்கு முக்கிய அம்சங்களில் பணியாற்றுகிறோம்," என்றார் நேற்று ஐந்து நாள் மெக்சிகோ பயணம் மேற்கொண்ட திரு டான்.
பசிபிக் கூட்டணி-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம், ஒவ்வொரு நாட்டுக்கும் அதனால் விளையும் பயன்கள், சிக்கலான காலகட்டத்திலும் நாடுகளுக்கிடையில் வர்த்தக உறவைக் கட்டிக்காக்கும் வழிகள் ஆகியவை குறித்து மெக்சிகோவின் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான மிகுவல் ருயிஸ்-கபானாசுடன் திரு டான் கலந்துறையாடினார்.
சிங்கப்பூரின் வெளிப்படையான தன்மை, மெக்சிக்கோவைக் கவர்ந்துள்ளது. மேலும் ஆசிய வட்டாரத்தில் மெக்சிகோவின் பங்காளியாக சிங்கப்பூர் திகழ்கிறது என்றும் தொழில்நுட்ப மேம்பாடு, கடல்துறைத் தொடர்பு, நிலைத்தன்மை உத்திகள் போன்றவை சிங்கப்பூரை மெக்சிகோவின் மதிப்புமிக்க வர்த்தக பங்காளியாகத் திகழ செய்துள்ளது என்றும் திரு கபானாஸ் வர்ணித்தார்.
இந்த ஒப்பந்தம், சிங்கப்பூர் நிறுவனங்கள் மெக்சிகோவிலும் லத்தின் அமெரிக்க நாடுகளிலும் வர்த்தகம் புரியவும் மெக்சிகோவும் அந்த வட்டார நாடுகள் சிங்கப்பூரிலும் ஆசியாவிலும் வர்த்தகம் புரியவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்றார் திரு டான்.

