மாதங்கி இளங்கோவன்
மனைவி, பிள்ளைகளுடன் 15 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த திரு சடையன் அகமது மைதீன் ஜபார், 48, திடீரென்று 2020ல் அதே மனைவி, பிள்ளைகளைத் தாக்கவும் வார்த்தைகளால் புண்படுத்தவும் தொடங்கினார்.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழலில் வீட்டிலிருந்தவாறு தாம் வேலை செய்யத் தொடங்கியதால் மன அழுத்தம் காரணமாக தம் குணத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் நினைத்துக்கொண்டார்.
அவர் நடந்துகொண்ட விதத்தைத் தாங்காது பெயர் குறிப்பிட விரும்பாத அவரின் மனைவி, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மணவிலக்கு கோரினார். அதையடுத்து பிள்ளைகளுடன் திரு மைதீனிடமிருந்து விலகியும் சென்றுவிட்டார்.
தனியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமது பூனைகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது திரு மைதீனுக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவருக்கு அடுத்தடுத்து வலிப்பு ஏற்படும்போதெல்லாம் தலைவலியும் வந்தது. வலிப்பு வந்தபோது கண்பார்வை சுமார் 20 வினாடிகளுக்குச் சரியாகத் தெரியாமல் போனது. இந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நீடித்தது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் திரு மைதீனின் இதயம், நுரையீரல் ஆகியவற்றைப் பரிசோதித்துப் பார்த்ததில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் தென்படவில்லை. இருப்பினும் வீட்டில் திரு மைதீனின் மாறுபட்ட நடவடிக்கைகளைப் பற்றி அறிந்திருந்த அவரின் மருத்துவரும் இணைப் பேராசிரியருமான யோ செங் சாய், திரு மைதீனின் மூளையைப் பரிசோதித்துப் பார்க்கத் தீர்மானித்தார்.
அதில் மூன்று செண்டிமீட்டர் அளவில் புற்றுநோய் அறிகுறியுடைய கட்டி ஒன்றைக் கண்டுபிடித்தார்.
கோபம், அச்சம், வன்முறை எண்ணம் போன்ற ஒருவரின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் பகுதியான 'அமிக்டாலா'வை அவருக்கு ஏற்பட்டிருந்த மூளைப் புற்றுநோயான 'கிளியோபளஸ்டோமா (glioblastoma) பாதித்திருப்பது தெரிய வந்தது. தாம் என்ன செய்கிறோம் என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் திரு மைதீன் 'ஒரு மிருகத்தைப் போல் நடந்துகொள்ள' இந்தப் புற்றுநோய் காரணமாக இருந்துள்ளதாக பேராசிரியர் யோ குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் 100,000 பேரில் மூன்று பேரைப் பாதிக்கும் இந்தப் புற்றுநோய்க்கு மருந்து ஏதுமில்லை.
மேலும், மிக வேகமாக வளரக்கூடிய கட்டி, ஆரம்பக் கட்டத்தில் எந்த ஓர் அறிகுறியையும் காட்டாது.
தம் மூளையில் கட்டி இருப்பதை அறிந்ததும் திரு மைதீன் இடிந்து போனார். தமக்கு இருக்கும் பிரச்சினையைப் பற்றி இணையத்தில் வாசிக்க வாசிக்க, தம் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் பேராசிரியர் யோவின் ஆலோசனைக்கு இணங்கி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திரு மைதீன் இரண்டு அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டார்.
கட்டியை அகற்றிய பின்னர், தொடர்ந்து கீமோதெரபி சிகிச்சைக்கும் திரு மைதீன் சென்று வருகிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் உடனடி மாற்றம் தெரிந்ததை அவரே உணர்ந்தார். மனைவி, பிள்ளைகளிடம் தாம் முன்பு நடந்துகொண்ட விதத்திற்கு மூளையில் இருந்த கட்டியே காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
'என் மனைவியை ஏன் பிரிந்தேன்' என்ற கேள்வியை அவர் முணுமுணுக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் குடும்பத்தாரிடம் தம் நிலையைப் பற்றி கூற விரும்பாத திரு மைதீன், பின்னர் மனம் மாறி தன் பிரச்சினையைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
திரு மைதீனுக்கு நடந்ததை அறிந்ததும் அவருக்குத் துணையாக நிற்கத் தயாராக இருந்தார், அவரின் முன்னாள் மனைவி. கீமோதெரபி சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, திரு மைதீனைப் பராமரிப்பது என அவரின் முன்னாள் மனைவி ஆதரவுக்கரம் நீட்டினார்.
இருவருக்கும் இடையே மீண்டும் அன்பு மலர்ந்ததை அடுத்து கடந்த மாதம் இருவரும் திருமண உறவில் மீண்டும் இணைந்தனர்.
இதற்கிடையே திரு மைதீனுக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் உண்டு என்று பேராசிரியர் யோ குறிப்பிட்டார். இருப்பினும் வாழ்க்கையை ரசிக்கத் தொடங்கிஉள்ளார் திரு மைதீன்.
எதிர்காலத்தைப் பற்றி அதிகம் திட்டமிடாமல் அன்றைய தினத்தில் மனைவி, பிள்ளைகளுடனான தம் நேரத்தை இன்பமாகக் கழிப்பதில் அவர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

