மானபங்க வழக்கு: தண்டனைக்கு
எதிரான மேல்முறையீடு தள்ளுபடி
பல்கலைக்கழக வளாகத்தில் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக நிரூபணமாகி சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர் 25 வயது லீ யான் ரூவுக்குப் பத்து மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. லீ தன் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததை அடுத்து நேற்று உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. 2019ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியன்று ஒரே அறையில் படித்துக் கொண்டிருந்தபோது உடன் இருந்த பெண்ணை லீ மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது. பிரம்படிகள் இல்லாத ஆறு மாதச் சிறைத் தண்டனை போதும் என்று தற்காப்புத் தரப்பு முன்வைத்த வாதத்தையும் நீதிபதி மறுத்தார். இன்னும் ஒரு வாரத்தில் லீ தண்டனையை நிறைவேற்றத் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வறுமையைப் போக்கும் திட்டத்திற்கு $500,000 பரிசு
சிங்கப்பூரில் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் குழுவுக்கு உள்ளூர் தொண்டூழிய அமைப்பு ஒன்று $500,000 பரிசுத் தொகையை வழங்கவுள்ளது. கொள்ளைநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு, குறிப்பாக பொது வாடகை வீடுகளில் வசிக்கும் இளம் பிள்ளைகளுடைய குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று 'டிரீம்ஸ் ஏஷியா' அமைப்பு எதிர்பார்க்கிறது.
குடும்பச் சேவை நிலையங்கள், சமூக நிறுவனங்கள், சிங்கப்பூரில் உள்ள சமூகம் சார்ந்த அமைப்புகள் ஆகியவை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் வெற்றிபெறும் திட்டம் அமைதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. குறைந்த வருமானக் குடும்பங்களுடன் குறைந்தது மூன்று மாத காலத்திற்கு இணைந்து செயல்பட்ட அனுபவமுள்ளவர்கள் இந்தச் சவால் திட்டத்தில் இலவசமாகப் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வறுமையும் சமமற்ற நிலையும் சிங்கப்பூரில் வெளிப்படையாகத் தெரியாத வண்ணம் உள்ளதால் இந்த விவகாரம் தொடர்பில் பலர் அறியாமையில் உள்ளனர். இந்தப் போட்டியின் வழியாக சிங்கப்பூரில் ஏழ்மை உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறப்பட்டது.

