கத்தி ஏந்தி காவல் துறை அதிகாரிகளைத் தாக்க முயன்ற ஆடவர் டேசர் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
56 வயதான அந்த ஆடவர் பூன் லே வட்டாரத்தில் கத்தி ஏந்திய நிலையில் இருந்ததாகச் சிங்கப்பூர்க் காவல் துறைக்கு நேற்று மாலை சுமார் 2 மணியளவில் அழைப்பு கிடைத்தது.
கத்தியைக் கீழே போடும்படி பலமுறை அதிகாரிகள் வலியுறுத்தியும், அவ்வாறு செய்ய அவர் மறுத்துவிட்டார்.
கத்தியைப் பிடித்துக்கொண்டு அதிகாரிகளை நோக்கி அவர் வந்ததாகக் கூறப்பட்டது. ஆடவரைத் தடுக்க அவரை நோக்கி காவல் துறை டேசர் துப்பாக்கியால் சுட்டது. பின்னர், அவர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இன்று நீதிமன்றத்தில் அவர் மீது ஆயுதம் தாங்கிய குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டு சிறையும், குறைந்தது ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்படலாம்.


