கத்தியுடன் காவல் அதிகாரிகளை நோக்கி ஓடிய ஆடவர் கைது
கத்தி ஏந்திய நிலையில், காவல்துறை அதிகாரிகளை நோக்கி வேகமாக ஓடியதாகக் கூறப்படும் 56 வயது ஆடவர் ஒருவரை 'டீசர்' துப்பாக்கியால் செயலிழக்கச் செய்து அவரை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பூன் லே பிளேசில் கத்தி ஏந்திய நிலையில் ஆடவர் ஒருவர் காணப்பட்டது குறித்து அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகளை எதிர்த்த அந்த ஆடவர், கத்தியுடன் அவர்களை நோக்கி ஓடினார். அதிகாரிகள் எச்சரித்தும் அந்த ஆடவர் கேட்காததால், அதிகாரிகளில் ஒருவர் 'டீசர்' துப்பாக்கியைக் கொண்டு அவரைச் செயலிழக்கச் செய்தார். அதையடுத்து அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தது ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றத்தில் நேற்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட இருந்தது. சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக பொது இடங்களில் ஆயுதம் ஏந்திய ஆடவர் சிலர், மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாகத் திகழ்ந்த சம்பவங்கள் செய்திகளில் இடம்பிடித்து வந்துள்ளன.
மோசடி மின்னஞ்சல்கள்; 149 பேர்
$70 மில்லியனுக்கு மேல் இழந்தனர்
வேலை சம்பந்தப்பட்ட மோசடி மின்னஞ்சல்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து குறைந்தது 149 பேர் இலக்காகியுள்ளனர். இதனால் அவர்கள் இழந்த மொத்த தொகை குறைந்தது $70.8 மில்லியன்.
ஊடுருவப்பட்ட மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் சக ஊழியர்கள், வர்த்தகப் பங்காளிகள் அல்லது விநியோகிப்பாளர்களைப்போல மோசடிக்காரர்கள் நடிப்பார்கள் என்று காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
இந்த மோசடி மின்னஞ்சல் முகவரிகளில் பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் தென்படும். ஆனால், பார்ப்பவர்கள் அவற்றைக் கவனிக்காமல் போகக்கூடும்.
வங்கிக் கணக்கு எண் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல்கள் வரும். இதர வங்கிக் கணக்குகளுக்குக் கட்டணத்தைச் செலுத்துமாறு அவர்களுக்குக் கோரிக்கை விடுக்கப்படும்.
இத்தகைய மின்னஞ்சல்கள் உண்மையானவை என நம்பி, புதிய வங்கிக் கணக்குகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மாற்றிவிடுவர்.
தங்களுடைய விநியோகிப்பாளர்களிடம் விசாரித்த பிறகே, தாங்கள் மோசடிக்கு இலக்காகிவிட்டதைப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வர்.
30,000 பயனாளர்களுக்கு கைப்பேசித் தரவுத் திட்டங்களை வழங்க கடப்பாடு
மின்னிலக்க ரீதியில் தொடர்புடைய, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இங்குள்ள மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்க முடியும்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்த 'டிஜிட்டல் ஃபார் லைஃப்' நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்ட தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, 'டேட்டா ஃபார் ஆல்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
எம்1, சிங்டெல், ஸ்டார்ஹப் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 10,000 கைப்பேசித் தரவுத் திட்டங்களை வழங்கக் கடப்பாடு கொண்டுள்ளன. இது, 30,000 பயனாளர்களுக்கு ஆதரவளிக்கும்.
$3 மில்லியனுக்கு மேல் மதிப்புள்ள இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள், இளையர்கள், மூத்தோருடன் உடற்குறையுள்ளோரும் அவர்களைப் பராமரிப்பவர்களும் பயனடைவர்.
பொது அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள், சமூக பங்காளித்துவ அமைப்புகள் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றன.

