முரசொலி
உலகில் விமானப் போக்குவரத்தின் முக்கியத் துவம், இப்போதும் சரி, வருங்காலத்திலும் சரி எந்த அளவுக்கு இருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், அந்த உலகளாவிய துறையின் நடுநாயகமாக, இணைப்பு மையமாக திகழ்ந்து வருகிறது என்பதையும் எடுத்துச் சொல்லி விளக்கவேண்டிய தேவை இல்லை.
உலகப் பொருளியலின், ஒவ்வொரு நாட்டுப் பொருளியலின் ஆதாரத் துறைகளில் ஒன்றாக இருந்து வருவாயை ஈட்டித் தருகின்ற, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுக்கின்ற சுற்றுலா தொழில்துறைக்கு விமானப் போக்குவரத்தும் அதில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையமும் ஆற்றும் சேவையும் தவிர்க்க இயலாத அளவுக்கு முக்கியமானவை என்பதை உலகம் உணர்ந்திருக்கும்.
அப்படிப்பட்ட துறையையும் அதைச் சேர்ந்த சாங்கி விமான நிலையத்தையும் கொவிட்-19 தொற்று முற்றிலும் முடக்கிப்போட்டுவிட்டது. இரண்டு ஆண்டு காலமாக உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு விமானங்கள் தரையிலேயே நிறுத்தப்பட்டுக் கிடந்ததால் சாங்கி விமான நிலையமும் சுறுசுறுப்பு இழந்து, களை இழந்து காணப்பட்டது.
ஆயிரமாயிரம் பேர் வருவதும் போவதுமாக, ஆயிரக்கணக்கான சரக்குகள் இறங்குவதும் ஏறுவதுமாக ஓய்வு ஒழிச்சலின்றி ஜேஜே என்று இருந்து வந்த சாங்கி விமான நிலையம், கிட்டத்தட்ட முற்றிலும் முடங்கிப்போய்க் கிடந்தது. ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விடும் அளவுக்கு இப்போது சூழ்நிலை மாறத் தொடங்கி இருக்கிறது. விமானப் போக்குவரத்துத் துறை வலுவாக மீட்சி காணத் தொடங்கிவிட்டது. சாங்கி விமான நிலையம் மீண்டும் சுறுசுறுப்பு அடையத் தொடங்கிவிட்டது.
கொவிட்-19க்கு முன்பு வந்துசென்ற பயணிகளில் ஏறக்குறைய பாதி அளவு பயணிகளை இந்த ஆண்டு முடிவில் ஈர்த்துவிட வேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்கு. சாங்கி விமானப் பயணிகளின் சராசரி அளவு இப்போது தொற்றுக்கு முன்னதாக வந்து சென்ற பயணிகளின் அளவில் ஏறக்குறைய 40 விழுக்காடாக இருக்கிறது.
இந்த நிலையில், ஜூன் மாத விடுமுறைக் காலம் வருகிறது. உலக அளலில் கோடைப் பயணக் காலமும் தொடங்க இருக்கிறது. ஆகையால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடலாம் என்ற சிங்கப்பூரின் நம்பிக்கை வலுவடைந்துள்ளது.
அதோடு மட்டுமல்ல, ஜூன் மாதத்திற்குப் பிறகு சிங்கப்பூர் தனது பயணிகள் இலக்கை அதிகரிக்கும் என்பதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது.
இதற்குத் தோதாக சாங்கி விமான நிலையம் ஆயத்தமாகி வருகிறது. தொற்றுக் காலத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை சாங்கி விமான நிலையம் இழந்துவிட்டது.
இதை ஈடுசெய்தாக வேண்டும். ஆகையால் அதிக அளவில்- அதாவது 6,600 பேரை வேலையில் சேர்க்க விமான நிலையக் குழுமம் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. பயணிகள் அதிகரிப்பை ஈடுசெய்யும் அளவுக்கு ஊழியர்களைப் பெறவேண்டும். முடங்கிக் கிடந்த இதர அனைத்து செயல்முறைகளையும் மீண்டும் ஆயத்தப்படுத்த வேண்டும்.
இது ஒரு சவாலாகவே இருக்கும். வெற்றிகரமான முறையில் இதைச் சமாளித்தாக வேண்டும் என்பதால், சேவைத் தரம் குறைய இடம் கொடுத்துவிடாமல் இதைச் சாதிக்க சாங்கி விமான நிலையம் உற்சாகத்துடன் களத்தில் இறங்கி இருக்கிறது.
உலக விமானப் போக்குவரத்துத் துறையின் மையம் என்ற தனது இடத்திற்கு வேகமாக மீண்டும் வந்துவிட வேண்டும் என்று சாங்கி திட்டவட்டமான தீர்மானம் கொண்டுள்ளது.
தொற்று மிரட்டல் தொடரும் சூழலில், பயணிகள் பாதுகாப்பாக, அதே நேரத்தில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இல்லாமல், குடிநுழைவு அனுமதியைத் தங்கு தடையின்றி வேகமாக பெற்று செல்லக்கூடிய நிலை இருந்தால் அது மிகவும் அனுகூலமாக, அனைத்துலக அளவில் நற்பெயரைக் கட்டிக்காக்கக்கூடியதாக இருக்கும்.
ஆகையால், விமான நிலையத்தில் குடிநுழைவு அனுமதி முகப்புகளில் அனுமதி பெற வரும் பயணிகள், தங்கள் கடப்பிதழை அல்லது விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டைக் காட்டாமலேயே அனுமதி பெற்றுச் செல்லக்கூடிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் சாங்கி தயாராகி வருகிறது.
இவற்றோடு மட்டுமின்றி, வருங்காலத்திற்கும் சிங்கப்பூர் தயாராகி வருகிறது என்பது இன்னும் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.
விமான நிலைய முனையம் 5 கட்டுமானப் பணிகளை இன்னும் சில ஆண்டுகளில் சிங்கப்பூர் தொடங்க இருக்கிறது. தொற்றில் இருந்து உலக விமானப் போக்குவரத்துத் துறை முற்றிலும் மீட்சி கண்டு மறுபடியும் வேகமெடுக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு, 2030களில் முனையம் 5 செயல்பட வேண்டிய தேவை இருக்கும் என்று சிங்கப்பூர் கணக்கிட்டுள்ளது.
இவை எல்லாம் மிகவும் ஊக்கமளிக்கும் நிலவரங்களாக இருக்கின்றன. என்றாலும்கூட எதிர்காலத்தில் ஏதாவது ஒரு கிருமி உருமாறி தொற்று தலைதூக்கி உலக விமானப் பயணம் பாதிக்கப்படக்கூடிய மிரட்டல் இன்னமும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இது ஒருபுறம் என்றால், போதாக் குறைக்கு உக்ரேன்- ரஷ்யா மோதல் இப்போதைக்கு முடியாது போல் தெரிகிறது. உலக அளவில் சென்ற ஆண்டில் விமானப் பயணம் மேற்கொண்டவர்களில் 0.8% உக்ரேனியர்களாக இருந்தனர். அதேபோல் உலக விமானப் பயணிகளில் 1.3 விழுக்காட்டினர் ரஷ்ய நாட்டினராக இருந்தனர். ஐரோப்பிய பயணிகளில் கிட்டத்தட்ட 3.3 விழுக்காட்டினர் உக்ரேனியர்கள். 5.7 விழுக்காட்டினர் ரஷ்யர்கள்.
உக்ரேன்- ரஷ்யப் போர் காரணமாக எண்ணெய் விலை ஏறி அதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கக்கூடிய வாய்ப்பும் உண்டு என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் அண்மையில் எச்சரித்தது. இவற்றை எல்லாம் இப்போது நினைத்துப்பார்க்க வேண்டி இருக்கிறது.
இவை அனைத்தையும் சிங்கப்பூர் சமாளித்தாக வேண்டும்; கணிக்க இயலாத எதிர்காலத்தில் தொற்று போன்ற மிரட்டல் தலைதூக்கும்போது அவற்றை எல்லாம் வெற்றிகரமான முறையில் சமாளித்தாக வேண்டும். போட்டியில் வென்று முதன்மையில் நிலைத்திருக்க வேண்டும்.
இந்தத் தேவைகளை எல்லாம் மனதில் நிறுத்தி செயல்பட்டுவரும் சாங்கி விமான நிலையம், நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் பொருத்தமாக, தோதாக தன்னை மேம்படுத்திக்கொள்ளும்; உலக விமானப் போக்குவரத்தின் ஆதார மையமாக தொடர்ந்து நீடித்து, நிலைத்து இருந்து சேவையாற்றும் என்பது திண்ணம்.

