சிங்கப்பூரரான மருத்துவர் ஆன் டோ, உக்ரேனில் முன்களப் பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கும் முயற்சி ஒன்றின் இணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இழப்பு குறித்த கவலை, சோகம், துயரம் ஆகியவற்றைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் டோ.
சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த முயற்சியின்கீழ், பயிற்சி அளிக்கப்பட்ட தொண்டூழியர்களை உக்ரேனில் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், மனநல ஆலோசகர்கள், மனிதநேய ஆர்வலர்கள் போன்றோருடன் இணைத்து பணியில் ஈடுபடுத்துவது திட்டம்.
உக்ரேனிய மக்களுக்கு மனநல ஆதரவு வழங்கும்வகையில் தொண்டூழியர்களைத் தயார்ப்படுத்துவது இதன் நோக்கம்.
சிறுவர் இல்லத்தில் இறுதிக்காலப் பராமரிப்பு வழங்கும் மருத்துவராகப் பணிபுரிகிறார் டாக்டர் டோ. சக மருத்துவர்களுடன் இணைந்து இந்தப் புதிய திட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளார்.
"அனைத்துலகச் சமூகம் என்ற முறையில், உக்ரேனில் உள்ள சக மருத்துவர்களுக்கு ஆதரவு தரத் திட்டமிட்டோம். தாங்கள் இதில் தனித்து விடப்படவில்லை என்று அவர்களுக்கு உணர்த்த விரும்பினோம்.
"அந்நாட்டு மக்கள், கலாசாரம் ஆகியவை பற்றி அவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். எனவே பின்னணியில் இருந்து அவர்களுக்கு ஆதரவு தருவது எங்கள் பணி," என்றார் டாக்டர் டோ.
சென்ற வியாழக்கிழமை இவர் இணைந்து தலைமை தாங்கும் புதிய திட்டத்திற்கான பயிற்சி காணொளி வழியாக இடம்பெற்றது. உலகெங்கும் உள்ள இறுதிக்காலப் பராமரிப்பு நிலையங்கள், மனநல ஆலோசனை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் மற்றோர் இணைத் தலைவரான உக்ரேனிய மனநல மருத்துவர் மரியா வின்னிட்ஸ்கா, தனிப்பட்ட சந்திப்புகள் மூலம் உணர்வுரீதியாக பாதிக்கப்பட்ட உக்ரேனியர்களுக்கு இலவசமாக மனநல ஆதரவு வழங்குகிறார். கியவ் நகரில் வசிக்கும் இவரது சக மருத்துவர்கள் மூவர் இதில் கைகொடுக்கின்றனர். இவர்கள் காணொளிச் சந்திப்புகள் மூலம் இவ்வாறு தொண்டூழியம் செய்கின்றனர்.

