செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5b6ec648-7f4e-4bc9-a696-e362da66480c
-

ஊழியர்களை தக்கவைக்கப் போராடும் விலங்குநல மருத்துவத் துறை

நீண்ட வேலைநேரம், களைப்பு, பணியில் முன்னேறும் வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் சிங்கப்பூரில் விலங்குநல மருத்துவத் துறையை விட்டுப் பலரும் விலகுவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் விலங்குநல மருத்துவச் சேவை அமைப்புகள் ('எஸ்விஏ', 'ஏவிஎஸ்') சென்ற ஆண்டு நடத்திய ஆய்வில் ஏறக்குறைய 400 பேர் கலந்துகொண்டனர். சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பது, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு, வேலை-வாழ்க்கைச் சமநிலை, உடல்நல பாதிப்புகள், மனநல பாதிப்புகள் போன்றவை இந்தத் துறையில் உள்ளோர் எதிர்நோக்கும் சவால்கள் என்று இவர்கள் கூறினர்.

சிங்கப்பூரில் 298,000 செல்லப் பிராணிகள் இருப்பதாகவும் உரிமம் பெற்ற விலங்குநல மருத்துவர்கள் 474 பேர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக, 'எஸ்விஏ' சென்ற மாதம் 23ஆம் தேதி 'ஃபேஸ்புக்கில்' பதிவிட்டது.

பல நாள்களுக்கு உணவு உண்ணவோ கழிப்பறைக்குச் செல்லவோ நேரமின்றி பணியாற்ற வேண்டியிருப்பதாக இந்தத் துறையில் வேலைசெய்வோர் கூறுகின்றனர். ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் எப்போதாவது ஒருமுறைதான் நேரத்துக்கு வீடு செல்ல முடியும் என்கின்றனர் இவர்கள்.

2022ன் முதல் நான்கு மாதங்களில் குறைவான தீச்சம்பவங்கள்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 339 தீச்சம்பவங்களைக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 6.9 விழுக்காடு குறைவு.

தீயைத் தடுக்கும் நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவிருப்பதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இந்த ஆண்டு தீச்சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் அண்மையில் பிடோக் நார்த், நியூ அப்பர் சாங்கி ரோடு ஆகிய இடங்களில் ஏற்பட்ட தீச்சம்பவங்களில் சிலர் உயிரிழந்ததை அது சுட்டியது.

சென்ற ஆண்டு அக்டோபரில் பொதுமக்களுக்கு முதலுதவித் திறன்களைக் கற்பிக்கும் பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இதுவரை ஏறத்தாழ 1,200 பேர் இவற்றின் மூலம் 'சிபிஆர்' செய்முறை, தீயணைப்பானைப் பயன்படுத்தும் முறை போன்றவற்றைக் கற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.