குத்துச்சண்டையில் பலரையும் வீழ்த்தி வெற்றிக் கிண்ணங்களையும் பதக்கங்களையும் குவித்தவர் தனிஷா. ஆனால் அவை தம் பெற்றோரின் கண்ணில் படக்
கூடாது என்பதற்காக அவற்றை ஒளித்தே வைத்திருந்தார்.
இன்று முட்டி மோதி ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆகியுள்ளார் 24 வயது தனிஷா மதியழகன். தனிஷா தனது 17வது வயதில் குத்துச்சண்டை பயிலத் தொடங்கியபோது ஒருசில பெண்களே அத்துறையில் இருந்ததால், ஆண்களுடன் அவர் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது.
எதிராளியின் கோபத்துக்கு ஆளாவது, வரும் அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்றவை தனிஷாவுக்குப் பழகிப்போனது. முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டபோதும் மறுநாள் பயிற்சிக்குச் செல்ல தனிஷா தவறவில்லை.
"எனது குத்துச்சண்டைப் பயணத்துக்கு ஆதரவளிக்க என் பெற்றோர் தயங்கினர். ஆனால் என் உறுதியைக் கண்டு அவர்கள் மனம் மாறினர்," என்கிறார் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்லூரியில் 'டயக்னாஸ்டிக் ரேடியோகிராஃபி' துறையில் பயிலும் தனிஷா.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரைப் பிரதிநிதித்த தனிஷா, சிங்கப்பூர்க் கொடியைத் தானும் பறக்கவிட்டு மகிழ்ந்தார். தான் மனஉளைச்சலுக்கு ஆளாகும்போதெல்லாம் குத்துச் சண்டையில் இதுவரை அடைந்த மைல்கற்களை நினைவுகூருவார் தனிஷா.
பெண் குத்துச்சண்டை வீரர்
களுக்கான சமூக ஆதரவுக் குழுவை உருவாக்குவதில் பங்காற்றி வரும் தனிஷா, ஓய்வு பெறும் காலத்தில் அதை விரிவு
படுத்த இலக்கு கொண்டுள்ளார்.
"பெண்கள் குத்துச்சண்டை போடுவது இயல்பான ஒன்றாக மாறவேண்டும். அத்தகைய சூழலை உருவாக்குவதில் நான் பங்காற்றுவேன்," என்று திடமாகக் கூறுகிறார் இளையர் தனிஷா.

