மின்னிலக்கக் கார் தடமானது அலீஃப் புகுந்துவிளையாடும் ஒரு களம். மின்பந்தய வீரராகத் திகழும் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தேசிய அளவிலும் உலக அளவிலும் மின்பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். ஆசிய பசிஃபிக் வட்டார மின்பந்தயங்களில் ஏழு முறை வெற்றிவாகை சூடியுள்ளார் இவர்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம், மின்பந்தய விளையாட்டுகளில் ஆழ்ந்திருப்பார் அலீஃப். 2019ஆம் ஆண்டில் அனைத்துலக லோஜிடெக் ஜி போட்டியில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து நான்காம் இடத்தைப் பிடித்தார் அலீஃப்.
ஒன்பது வயதில் காரோட்ட சிம்யுலேட்டரின்மீது அலீஃப் கொண்ட மோகம், அவரை இந்த அளவுக்குச் சாதிக்கச் செய்யும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
"சிறு வயதில் எனக்கு பந்தய கார்களென்றால் கொள்ளை ஆசை. எஃப்1 பந்தய வீரர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதற்கான பணவசதி எங்களிடம் இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்த மின்பந்தயத் துறை அமைந்தது. இப்போது அதுவே எனது அடையாளமாகிவிட்டது," என்றார் பொறியியல் துறையில் பயில விரும்பும் 24 வயது ஆர். முகமது அலீஃப். அலீஃபின் பயணத்தில் அவரின் குடும்பத்தார் துணைநிற்கின்றனர். இது அவரது விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் கைகொடுப்பதாக இவர் கூறுகிறார்.
"மின் விளையாட்டு என்பது ஒரு விளையாட்டே அல்ல, இதில் பணம்தான் விரயமாகிறது என்றெல்லாம் இத்துறையை ஏளனப்
படுத்துவோர் உண்டு. ஆனால், அந்த எண்ணத்தை மாற்றியமைக்கும் சிங்கப்பூர் விளையாட்டளர்களில் நானும் ஒருவன் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது," என்றார் அலீஃப்.
உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வது, தெளிவாகப் பேசுவது போன்ற வாழ்வியல் திறன்களை மின்பந்தயத்துறை அளிக்க வல்லது என்பதை இன்னமும் பலர் அறியாமல் உள்ளதாக அலீஃப் கூறுகிறார்.