சீனாவின் வளர்ச்சி இந்த வட்டாரத்திற்கு நன்மையளித்தாலும் ஆசிய-பசிபிக் நாடுகள், ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடனான முக்கிய உறவுகளைத் தக்கவைத்துக்கொள்ளவே விரும்புகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளியலான ஜப்பானுடனான உறவை செழுமைப்படுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
மீள்திறனுக்குத் தேவைப்படும் சமநிலையைக் கட்டிக்காப்பதும் தனியொரு நாட்டை அதிகம் சாராமல் இருப்பதும் இதன் நோக்கங்கள் என்று பிரதமர் கூறினார்.
இதன் மூலம் இணைந்து வளப்பமும் நன்மையும் அடைவதோடு வட்டாரத்தில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநிறுத்தலாம் என்றார் திரு லீ.
தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஆசியாவின் வருங்காலம் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜப்பானிய ஊடகமான நிக்கேய் குழுமத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் வட்டாரப் பொருளியல், ராணுவ நிலைப்பாடு ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பது குறித்து நிக்கேய் தலைமைச் செய்தி ஆசிரியர் டெட்சுயா இகுச்சி திரு லீயிடம் கேள்வி எழுப்பினார்.
வட்டாரத்தில் மேம்பட்ட சமநிலையை அடைவதில் அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றின் பங்கு குறித்தும் அவர் வினவினார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் லீ, சீனாவின் பொருளியல் வளர்ச்சி அடைந்திருப்பதையும் கணிசமான அளவிற்கு அதன் ஆதிக்கம் அதிகரித்திருப்பதால் வட்டாரப் பொருளியல் பாதிக்கப்பட்டிருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
"ஆசிய நாடுகள் அனைத்துடனும் சீனா வர்த்தகம் மேற்கொள்கிறது. ஜப்பானும் சிங்கப்பூரும் இதில் அடங்கும். ஒத்துழைப்பு, வர்த்தகம், வளப்பம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதால் வட்டார நாடுகள் இதனை வரவேற்பது இயல்பானதே.
"அதேநேரம் ஆசிய வட்டாரத்தில் அமெரிக்கா பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்துள்ளது; எனவே அமெரிக்காவுடனான பொருளியல் உறவுகளும் முக்கியமானவை," என்றார் திரு லீ.
"முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தின்கீழ் அமெரிக்கா ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் 11 நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டது. அதற்கு பதிலாக, புதிய இந்தோ-பசிபிக் பொருளியல் கட்டமைப்பை அது பரிந்துரைத்துள்ளது.
"தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஆசியாவுடனான பொருளியல் உறவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டிருப்பதால், இந்த வாரம் தொடங்கவிருக்கும் அந்தக் கட்டமைப்பில் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளும் சேரத் திட்டமிட்டுள்ளன," என்று பிரதமர் லீ கூறினார்.
என்றாவது ஒருநாள் தடையற்ற வர்த்தகம் குறித்து அமெரிக்கா பேச்சு நடத்த முன்வரும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் அதற்குச் சில காலம் பிடிக்கும் என்றார்.
புதிய கட்டமைப்பில் இணைவதின்வழி சிங்கப்பூர் எத்தகைய பலன்களை எதிர்பார்க்கிறது என்ற கேள்விக்கு, மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியலில் ஒத்துழைப்பு, நீடித்த நிலைத்தன்மை மிக்க எரிசக்தி, நிலைத்தன்மை கொண்ட நிதி, கரிய வர்த்தக விதிகள் போன்றவை குறித்து பேச்சு நடத்த விரும்புவதாகப் பதிலளித்தார் திரு லீ.
உலகப் பொருளியலில் மிகப் பெரிய பங்கு வகிக்கும் சீனாவுடன் வர்த்தகம் செய்வதைத் தவிர்க்க நினைத்தால் அமைதியைத் தக்கவைக்கும் வாய்ப்புகள் குறையும் என்று நேர்காணலில் அவர் தெரிவித்தார். 'சிபிடிபிபி' உடன்படிக்கையில் சீனா இணைவதை சிங்கப்பூர் வரவேற்பதாகக் கூறிய திரு லீ, முடிவெடுப்பதில் இதர நாடுகளின் கருத்தும் முக்கியம் என்றார்.
சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றுடனான உறவு குறித்துப் பிரதமர் லீ கருத்து

