ஆசிய நாடுகள் தற்போது கடைப்பிடிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடர்வதே நல்லது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார்.
'நேட்டோ' போன்ற புதிய பாதுகாப்புக் கட்டமைப்பை நிறுவுவது அல்லது நாடுகள் அணிகளாகப் பிரிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வதைவிட இப்போதைய நிலையே மேம்பட்டது என்று ஜப்பானிய ஊடகமான நிக்கேய் குழுமத்திற்கு அளித்த நேர்காணலில் திரு லீ குறிப்பிட்டார்.
ஆசியாவில் ராணுவச் சமநிலை குறித்தும் வட அட்லாண்டிக் நாடுகளுக்கு இடையிலான 'நேட்டோ' கூட்டணி போன்ற பாதுகாப்புக் கட்டமைப்பு இந்த வட்டாரத்திற்குத் தேவையா என்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
முன்னைய சோவியத் யூனியனுக்கு எதிராக மேலை நாடுகளை ஒன்றிணைத்தது 'நேட்டோ'.
சோவியத் யூனியன் சிதறினாலும் 'நேட்டோ' இன்னும் செயல்படுகிறது; ஆனால் ரஷ்யாவிடமிருந்து அது அச்சுறுத்தலை எதிர்நோக்குகிறது என்பதை அவர் சுட்டினார்.
ஆனால் ஆசியாவில் இத்தகைய கூட்டணி எப்போதும் இருந்ததில்லை. வட்டார நாடுகள் பல சீனாவுடனும் அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் ஆகியவற்றுடனும் நல்லுறவு கொண்டுள்ளன.
இது இப்படியே தொடர்வது நல்லது என்றார் பிரதமர்.
விதிகளின் அடிப்படையிலான ஒழுங்குமுறையைக் கட்டிக்காப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், உக்ரேனியப் படையெடுப்பைக் கண்டிப்பதற்கு ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை பெரிதும் ஆதரவளித்தது நல்ல அறிகுறி என்றார்.
ஐக்கிய நாட்டு நிறுவனம், அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் போன்ற அனைத்துலகக் கட்டமைப்புகள், நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு அல்லது பிரச்சினை தோன்றினாலும் அதற்குத் தீர்வுகாணவும் இணைந்து பணியாற்றவும் வகைசெய்வதாகத் திரு லீ குறிப்பிட்டார்.
இத்தகைய அமைப்புகள் இல்லாவிட்டால் எளியோரை வலியோர் அடக்கியாள்வதும், வல்லரசுகளுக்குள் சண்டை மூள்வதும் வழக்கமாகிவிடும் என்றாரவர்.

