கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள விரும்புவோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரும் இனி ஒரே இடத்தை அதற்கு நாடலாம். இருவகை நடவடிக்கைகளுக்குமான ஐந்து புதிய நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
'ஜேடிவிசி' எனப்படும் இத்தகைய மேலும் ஐந்து நிலையங்கள் அடுத்த மாத இறுதியில் இருந்து கட்டங்கட்டமாகத் திறக்கப்படவுள்ளன.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதால் இம்மாத இறுதியில் இருந்து படிப்படியாக தடுப்பூசி நிலையங்கள் மூடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஒவ்வொரு 'ஜேடிவிசி' நிலையத்திலும் இரண்டு வகையான கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படும். 'ஜேடிவிசி பீஷான்' நிலையத்தில் நோவாவாக்ஸ், ஃபைஸர்-பயான்டெக் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் இங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் பதிந்துகொண்டுள்ளதாக அவர் கூறினார்.
புதிய நிலையங்களில் அன்றாடம் அதிகபட்சம் 4,500 பேருக்குத் தடுப்பூசி போட முடியும்; ஈராயிரத்துக்கும் அதிகமான கொவிட்-19 கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். தேவை ஏற்பட்டால் ஐந்து நிலையங்களிலும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் இயலும்.
கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு வருவோருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோருக்கும் தனித்தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடும் இடங்கள் பச்சை வண்ணத்திலும் கிருமித்தொற்றுச் சோதனைக்கான இடம் ஊதா நிறத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று செயல்படத் தொடங்கும் மற்ற நான்கு 'ஜேடிவிசி' நிலையங்கள் ஜூரோங் ஈஸ்ட், பாசிர் ரிஸ், காக்கி புக்கிட், காமன்வெல்த் ஆகிய வட்டாரங்களில் அமைந்துள்ளன.
இதுவரை தடுப்பூசி செலுத்தும் நிலையங்களாகச் செயல்பட்ட சமூகமன்றங்களைக் குடியிருப்பாளர்களின் இதர பயன்பாட்டிற்குத் திருப்பித்தர இந்நிலையங்கள் வழிவகுத்துள்ளன.

