துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் சிங்கப்பூரின் வெற்றிக்கான முக்கிய அம்சங்கள் என்று கூறியிருக்கிறார்.
டச்சுப் பொருளியலாளர் ஆல்பர்ட் வின்செமியசுடன் இணைந்து சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்கள் பொருளியல் உருமாற்றத்துக்காகப் பணியாற்றியபோது, மக்களுக்குச் சரியானதைச் செய்வதில் நம்பிக்கையும், புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு வித்தியாசமான அணுகுமுறைகளை முயலும் வெளிப்படையான மனப்போக்குமே அவர்களை வழிநடத்தியதாகத் திரு ஹெங் கூறினார்.
உலகம் இன்று மேலும் பிளவுபட்டிருக்கும் நிலையிலும் இந்த இரண்டு அம்சங்களும் மேலும் முக்கியத்துவம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
'ஆல்பர்ட் வின்செமியஸ் அன் சிங்கப்பூர்: ஹியர் இட் இஸ் கோயிங் டு ஹேப்பன்' எனும் தலைப்பிலான நூலின் வெளியீட்டு விழாவில் துணைப் பிரதமர் உரையாற்றினார்.
திரு ஆல்பர்ட் வின்செமியஸ் சிங்கப்பூரின் தலைமைப் பொருளியல் ஆலோசகராக ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றியவர்.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்த நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்த நூலை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் வின்செமியஸ் இருக்கையின் பேராசிரியர் யூஸ்டன் குவாவும் நன்யாங் பல்கலையின் ஆய்வு உதவியாளர்கள் லூக் நூர்சுல்தான் இயுல்டஷோவ், ஸாக் லீ ஆகியோர் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர்.

