சிறுவர்களுக்குப் பிடித்தமான தொழில்நுட்பத் தளங்களைப் பயன்படுத்துவதும் அவை அந்தச் சிறுவர்களை ஈர்ப்பதில் வெற்றிகண்டுள்ளனவா என ஆராய்வதும் மிக முக்கியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் வலியுறுத்தியுள்ளார். ஈராண்டுகளுக்குப் பின்னர் அதிபர் ஹலிமாவோடு நேற்று சிறுவர்களுக்கான 'பிக்னிக்' கூட்டம் ஒன்றும் புத்தகங்களின் கதையையொட்டிய உயிரோவியக் காணொளி வெளியீடு ஒன்றும் இஸ்தானாவில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தன.
உயிரோவியத்தின் கதை பின்னணி 2019ல் இஸ்தானா 150ஆம் ஆண்டின் நிறைவுக் கொண்டாட்டத்தில் வெளியிடப்பட்ட பிள்ளை
களுக்கான கதைப்புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. 'த கூரியஸ் சௌன்ட்ஸ் ஆஃப் த இஸ்தானா' என்ற தலைப்பில், விருந்தினர் அறையில் இந்த உயிரோவியம் காட்டப்பட்டது.
சுற்றுலா வழிகாட்டி ஒருவர், இஸ்தானாவிலுள்ள சிறப்பு அம்சங்களையும் அதன் சுற்றுப்புறத்தையும் சிறுவர்களுக்குச் சுற்றிக் காட்டுகிறார். அதிபர் ஹலிமா, பல்லின சமுதாயத்தை பிரதிநிதிக்கும் குரல் கொண்ட சிறுவர்கள் நால்வரின் கதாபாத்திரங்கள் என பல உண்மைக் கதாபாத்திரங்களைக் கொண்டு நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரிக் குழு, அதிபர் அலுவலகத்தோடு இணைந்து இதனைத் தயாரித்துள்ளது.
"புத்தகங்களைப் படிக்க பிடிக்குமா அல்லது புத்தகத்தில் வரும் கதையை உயிரோவிய வடிவில் பார்க்க பிடிக்குமா என நான் சிறுவர்களிடம் கேட்டபோது அனைவரும் உடனடியாகவே அவர்கள் உயிரோவிக் காணொளியைக் காண விரும்புவார்கள் என்று என்னிடம் கூறினர்," என பகிர்ந்துகொண்டார் அதிபர் ஹலிமா.
உயிரோவியத்தைத் தயாரித்திருந்த நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரி ஆசிரியராக பணிபுரியும் ரையன் சின், உயிரோவியத்தை படிப்படியாக செய்து முடிக்க ஆறு மாதங்கள் ஆனதாகக் கூறினார்.