கடந்த 2020 அக்டோபரில் நிகழ்ந்த நாணய மாற்று மோசடி தொடர்பாக நேற்று 25 வயது ஆடவர் ஒருவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லின் சூன் யான் என்னும் பெண்ணிடம் $80,000 மோசடி செய்த கும்பலில் இடம்பெற்றிருந்த லின் வெய் கியோங் என்பவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கும்பலில் இவரைத் தவிர ஸு யு, 27, லின்கோன் போ சோங் டீ, 25, கெல்வின் யாப் குயி ஹாவ், 25, ஆகியோர் மற்றவர்கள்.
சீன நாணயத்தை சிங்கப்பூர் வெள்ளிக்கு மாற்றவேண்டிய அவசியம் உள்ளோரைத் தேடி அவர்களை ஏமாற்றுவது இந்தக் கும்பலின் வேலை. வெளிநாட்டு நாணயத்தைத் தங்களது கணக்கிற்கு மாற்றியதும் அதற்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியை திருப்பித் தருவதாக இவர்கள் கூறுவர்.
அவ்வாறு ஏமாந்தவர்தான் திருவாட்டி லின் சூன் யான். 400,000 யுவானை கும்பலின் கணக்கிற்கு இவர் மாற்றினார். அதற்கு நிகரான 80,000 வெள்ளியை அந்தப் பெண்ணிடம் லின் வெய் கியோங்கும் அவருடன் இருந்த மற்றவரும் காட்டினர். ஆனால், தங்களது கணக்கிற்கு சீன நாணயம் வந்ததும் பேருந்து ஒன்றில் அவ்விருவரும் தப்பினர். பெண்ணும் அவரது கண வரும் டாக்சியில் துரத்திச் சென்று இருவரையும் பிடித்தனர்.

