பயிற்சி ஓட்டுநர்கள் கம்ஃபர்ட்டெல்குரோ ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் அடுத்த மாதம் முதல் மின்சார வாகனத்தைத் தெரிவு செய்யலாம்.
பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுடன் ஐந்து 'ஹியுண்டே கோனா எலெக்ட்ரிக்' கார்களை நிலையம் ஜூன் 1 அன்று சேர்க்கவுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 100 ஆக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி 2030ல் ஓட்டுநர் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் பாதிக்கு மேலானவை மின்சார வகையாக இருக்கும்.
வளைவதற்குச் சிறிது இடமே தேவைப்படுவதால் 'ஹியுண்டே கோனா' கார், ஓட்டுநர் பயிற்சித் தடத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு மின்சார 'அல்ரெண்டோ டிஎஸ் பிராவோ' மோட்டார்சைக்கிள்களையும் நிறுவனம் சேர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கம்ஃபர்ட்டெல்குரோ அதன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
நிறுவனம் அதன் பயிற்சி நிலையத்தின் மேல்கூரையில் 290 சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்தி உள்ளது. இதனால் தன் மின்சாரக் கட்டணம் 30% குறையும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

