சிங்கப்பூரின் எம்ஆர்டி, பொதுப் பேருந்துச் சேவை வழங்குநர்களுக்குக் கடந்த ஆண்டு நம்பகத்தன்மை ஊக்கத்தொகையாக கிட்டத்தட்ட $200 மில்லியன் வழங்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
எம்ஆர்டி கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் ஐந்தாண்டுகளில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அத்துடன் பொதுப் பேருந்துச் சேவை வழங்குநர்களில் ஒரு நிறுவனமாவது ஆண்டு அடிப்படையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. கொள்ளைநோயால் பொதுப் போக்குவரத்துப் பயணங்கள் குறைந்திருந்த சூழல், பேருந்து நிலைய ஓட்டுநர்களிடையே கொவிட்-19 கிருமிப் பரவல் ஏற்பட்டு காத்திருப்பு நேரம் அதிகரிப்பு என்ற பின்னணியிலும் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துக்கென கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டணச் சலுகைகளில் ரயில், பேருந்துக்காக தரப்பட்ட இந்த ஊக்குவிப்புத் தொகை ஏறத்தாழ 10% என்று ஆணையம் குறிப்பிட்டது.
பொதுப் போக்குவரத்துக்குரிய கட்டணச் சலுகைகளுக்காக அரசாங்கம் ஆண்டுக்கு $2 பில்லியன் ஒதுக்கும் நிலையில், அதில் இந்த $200 மில்லியன் அடங்கியுள்ளது.
இதற்கிடையே 2020ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நம்பகத்தன்மை ஊக்கத்தொகையும் கிட்டத்தட்ட இதே அளவாக இருந்ததென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.
இரு சேவைத் தடைகளுக்கு இடையே சராசரியாக ஒரு மில்லியன் கிலோமீட்டர் தூரம் செல்ல முடிந்ததால் ரயில் சேவை வழங்கும் எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனங்களுக்கு மொத்தம் $173 மில்லியன் நம்பகத்தன்மை ஊக்கத்தொகை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டிலும் நிறுவனங்களுக்கு இதே தொகை வழங்கப்பட்டது. பேருந்துச் சேவை வழங்குநர்களான எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, டவர் டிரான்சிட் சிங்கப்பூர் மற்றும் கோ-அஹேட் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு மொத்தம் சுமார் $27 மில்லியன் வழங்கப்பட்டது.
அரசாங்கம் 2016ல் நடைமுறைப்படுத்திய ஒப்பந்தத் திட்டத்தின் கீழ், செயல்திறன் அடிப்படையில் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையும் அபராதமும் விதிக்கப்படுகிறது.
கொள்ளைநோய் சூழலில் தம் நிறுவனத்தின் செயல்பாடுகளும் பராமரிப்புக் குழுவும் அதிகம் உழைத்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் துணைக் குழுமத் தலைமை நிர்வாகி திரு லீ லிங் வீ கூறினார்.
"நம் ரயில்கள், பேருந்துகளில் மேலும் அதிகமானோர் பயணம் செய்யத் தொடங்கியுள்ள நிலையிலும் பயணிகளை நிறுவனம் நன்கு கவனித்துக்கொள்கிறது," என்றார் அவர்.
கூடுதல் காத்திருப்பு நேரத்தின் அடிப்படையிலும் பேருந்துச் சேவை வழங்குநர்களின் செயல்திறன் மதிப்பிடப்படுகிறது. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று கூறப்படும் தகவலும் உண்மையில் எவ்வளவு நேரம் ஆகிறது என்ற தகவலும் இதற்காக ஒப்பிடப்படும்.

