துணிகரத் திட்டங்களுக்கான நிதி எனப்படும் 'த கரேஜ் ஃபண்ட்' கீழ் அமல்படுத்தப்பட்ட அனைத்து கொவிட்-19 நிவாரணத் திட்டங்களையும் நேற்றோடு முடக்கிவிட்டதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தேசிய சமூக சேவை மன்றமும் அறிவித்துள்ளன.
இருப்பினும் இவ்வாண்டு மே 24ஆம் தேதிக்கு முன் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் என்று மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என்று இரு தரப்புகளும் நேற்று தெளிவுபடுத்தின.
கொள்ளைநோய்ச் சூழலில் 'த கரேஜ் ஃபண்ட்' திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 30,000 பேர் பலன் அடைந்துள்ளனர். கிருமியால் நேரடியாக பாதிக்கப்பட்ட சுகாதாரப் பராமரிப்பு மற்றும் முன்கள ஊழியர்களும் குறைந்த வருமானக் குடும்பங்களும் இந்தப் பிரிவினரில் அடங்குவர்.
சார்ஸ் நோய்ப் பரவலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் ஆதரவு வழங்கும் வகையில் இத்திட்டம் 2003ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
'டோர்ஸ்கோன்' எனப்படும் தேசிய அளவிலான நோய்ப் பரவலுக்குரிய விழிப்புநிலை எச்சரிக்கைக் கட்டமைப்பு, ஏப்ரல் 26 முதல் மாற்றம் கண்டதையும் சமூக, எல்லை நடைமுறைகளில் பெருமளவு தளர்வுகள் ஏற்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு மறுஆய்வு நடந்ததை அடுத்து 'த கரேஜ் ஃபண்ட்' திட்டங்கள் நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
வேலையின்போது கிருமித்தொற்றுக்கு ஆளான சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு இந்நிதி உதவுகிறது. அத்துடன் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் வேலையில் இருந்தபோது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் அவர்களைச் சார்ந்துள்ள குடும்பத்தாருக்குத் திட்டம் கைகொடுத்துள்ளது.
பணியின்போது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், முன்கள ஊழியர்கள், சமூகத் தொண்டூழியர்கள் போன்றோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையிலும் திட்டத்தின் மூலம் அவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி மானியம் வழங்கப்பட்டது.
திட்டத்திற்குத் தகுதிபெறக்கூடியவர்கள் இவ்வாண்டு ஜூலை 24ஆம் தேதிக்குள் நிதி கோரி விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையே 'த கரேஜ் ஃபண்ட்' திட்டங்களுக்குத் தகுதிபெறாதவர்கள், நிதி ஆதரவு தேவைப்படும் நிலையில் 'கொவிட்-19 மீட்சி மானியம்' கோரி விண்ணப்பிக்கலாம்.
வேலை இழப்பு, கணிசமான வருமான இழப்பு, சம்பளமில்லா கட்டாய விடுப்பு போன்றவற்றுக்கு ஆளாகியிருந்தால் 'கொவிட்-19 மீட்சி மானியம்' கோரி விண்ணப்பிக்க முடியும்.

