புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் சேவைத் தடை
கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் நேற்றுக் காலை சேவைத் தடை ஏற்பட்டது. கியட் ஹாங் நிலையத்தில் ரயில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணமாகி விட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டன. அதையடுத்து ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக நண்பகல் 12.05 மணியளவில் அறிவிக்கப்பட்டது. படம்: ஷின் மின் வாசகர்
'ஜிஃப்' கடலை வெண்ணெய்
மீட்டுக்கொள்ளப்படுகிறது
'சால்மோனெல்லா' மாசுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 'ஜிஃப்' கடலை வெண்ணெய்யின் ஒரு சில தொகுப்புகள் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. உண்பதற்குத் தயார்நிலையில் இருக்கும் உணவுப் பொருள்களில் 'சால்மோனெல்லா' இருக்கக்கூடாது. குறிப்பாக தொகுப்பு குறியீட்டு எண்கள் 1275525 முதல் 2140425 கொண்ட வெண்ணெய்ப் புட்டிகள் மீட்டுக்கொள்ளப் படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி மீது பலர் ஆர்வம்
கொவிட்-19க்கு எதிரான நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள 1,000க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை பதிந்துள்ளனர். கூடுதல் தடுப்பூசியாக இதைப் போட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து மே 13ஆம் தேதி முதல் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உயரும் சமையல் எண்ணெய் விலை
உலகளாவிய உணவு விலைகள் ஏற்றம், உக்ரேன் போர் ஆகியவற்றால் சமையல் எண்ணெய் விலையும் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்துவிட்டது. தானியங்கள், உணவுக்கான எண்ணெய்கள் ஆகியவற்றை அனைத்துலக அளவில் ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகள் உக்ரேன், ரஷ்யா என்ற நிலையில் தற்போதைய நெருக்கடி காரணத்தால் அந்த எண்ணெய்களின் விலை உயர்ந்துவிட்டது. இந்நிலையில் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படியானதாக வைத்திருக்க இங்குள்ள பேரங்காடி நிறுவனங்கள் திணறுகின்றன.

