நோய் வந்த பிறகு மருத்துவம் பார்ப்பதைவிட நோயைத் தடுத்து சுகாதார நலன் பேணுவதில் கவனம் செலுத்துவதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் சிங்கப்பூர் முன்னுரிமை தரும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு குடும்ப மருத்துவர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று கூறிய அவர், குடும்ப மருத்துவர்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்குவதற்கு சிங்கப்பூரில் பொதுக் கொள்கைகள் தேவைப்படும் என்றார்.
குடும்ப மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையே வலுவான தொடர்புகளும் மருத்துவப் பரிந்துரை நெறிமுறைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சிக்கலான, கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவமனைகள் தகுந்த உதவியை வழங்க இயலும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
மருந்துக் குறிப்புகளை மட்டுமே வழங்காமல் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் உணவுமுறை, உடற்பயிற்சி பரிந்துரைகளையும் குடும்ப மருத்துவர்கள் வழங்க வேண்டும் என்றார் அவர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த 75வது உலகச் சுகாதாரக் கூட்டத்தின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் குறிப்பிட்ட ஒரு குடும்ப மருத்துவரை அடிக்கடி நாடுவதும் ஆலோசனை பெற அதே மருத்துவரை நீண்ட காலத்திற்குத் தக்க வைத்துக்கொள்வதும் சிறப்பு என்பதை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

