2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் கட்ட கொவிட்-19 தளர்வுகள் தொடர்பான தகவலைக் கசியவிட்ட தேசிய நூலக வாரியத்தின் துணை இயக்குநர் ஒருவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவா வீ லின், 52 (படம்), நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதிகாரத்துவ ரகசிய சட்டத்தின்கீழ், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடாத தகவலைப் பகிர்ந்ததாக ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
தேசிய நூலக வாரிய சொத்து, வசதிகள் மேலாண்மை துறையின் துணை இயக்குநராக பொறுப்பு வகித்த சுவாவிடம் அந்தத் தகவல் இருந்தது.
அரசாங்கம் அந்தத் தகவலைப் பொதுமக்களிடம் வெளியிடுவதற்கு முன்னதாக 2020 ஜூன் 11ஆம் தேதி, 18 பேர் இருந்த வாட்ஸ்அப் குழுவில் சுவா அதைக் கசியவிட்டார்.
பாதுகாக்கப்பட வேண்டிய அந்தத் தகவலை வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்ததாக காவல்துறை கடந்த ஆண்டு மே மாதம் தெரிவித்து இருந்தது.
இதனால், அந்தத் தகவல் வெளியிடப்பட வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே அது பரவலானது.
அந்தத் தகவலைப் பெற்றுக்கொண்டு அதை மற்றவர்களிடம் பகிர்ந்த அறுவருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று காவல்துறை கூறியது.
அதிகாரத்துவ ரகசிய சட்டத்தின்கீழ், தம்முடைய அரசாங்கப் பொறுப்பைப் பயன்படுத்தி, பாதுகாக்கப்பட வேண்டிய தகவலை மற்றொருவரிடம் பகிர்வது குற்றமாகும். அத்தகைய தகவலைப் பெற்றுக்கொள்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.
2020 ஜூன் 13ஆம் தேதி சுவா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக தேசிய நூலக வாரிய பேச்சாளர் ஒருவர் கடந்த ஆண்டு மே மாதம் கூறியிருந்தார்.

