வேலை, காதல் மோசடிகளில் ஏமாந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட $1 மில்லியனை வங்கிக் கணக்குகளுக்கு மோசடிக்காரர்கள் மாற்றிவிட உதவிய சகோதரிகள் இருவர், தலா ஓராண்டு சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும்.
நன்னடத்தைக் கண்காணிப்பு அதிகாரி ஒருவருக்கு ஒத்துழைப்பு தர அவர்கள் மறுத்ததைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தப் பயிற்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மோசடிகளில் தங்களுக்குப் பங்கு இருப்பதாக கடந்த மார்ச் 8ஆம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நூர் ஷஃபிகா முகம்மது அவ்வால், 20, நூர் அதிகா முகம்மது அவ்வால், 19, எனும் அந்தச் சகோதரிகளுக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
எனினும், நன்னடத்தைக் கண்காணிப்பு அதிகாரியின் அறிவுறுத்தலைப் பின்பற்றவும் அது தொடர்பிலான அமர்வுகளில் பங்கேற்கவும் அந்தச் சகோதரிகள் தவறினர்.

