சிங்கப்பூரில் புதிதாக விற்பனைக்கு வரும் தனியார் வீடுகளின் விலை அதிகமாக இருக்கும். அந்த வீடுகளை வாங்க விரும்புவோர் இதற்கு தயாராக வேண்டிய சூழல் வரலாம்.
தனியார் வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்களில் ஏறத்தாழ 71% நிறுவனங்கள் அடுத்த ஆறு மாத காலத்தில் தங்கள் விற்பனைக்கு கொடுக்கும் வீடுகளின் விலை மிதமானது முதல் கணிசமான அளவு வரை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
ஆய்வு ஒன்றின் மூலம் இந்த நிலவரம் தெரியவந்துள்ளது.
மூன்று மாதத்திற்கு முன் இப்படி எதிர்பார்த்த நிறுவனங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 60 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் நிலச் சொத்து அமைப்பு, 'நிலச்சொத்து கண்ணோட்ட அறிக்கை' என்ற ஓர் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டின்போது இத்தகைய 24 விழுக்காட்டு நிறுவனங்கள் புதிய வீடுகளின் விலை மாற்றமின்றி அதே அளவில் இருக்கும் என்றும் 5% நிறுவனங்கள் மட்டுமே விலை கணிசமான அளவுக்குக் குறையும் என்றும் எதிர்பார்க்கின்றன.
இதற்கு முன் 2021 கடைசிக் காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வைப் பார்க்கையில், விலை மாற்றமின்றி இருக்கும் என்று கூறிய நிறுவனங்களின் அளவு 35% ஆக இருந்தது.
இவ்வேளையில், அடுத்த ஆறு மாதத்தில் விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கை மிதமான அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்ட நிறுவனங்களில் சுமார் 65 விழுக்காட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கை மிதமான அளவுக்குக் குறைவாக இருக்கும் என்று ஏறக்குறைய 15 விழுக்காட்டு நிறுவனங்கள் கணிக்கின்றன.
அதேவேளையில், நிலச் சொத்து நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர், அடுத்த ஆறு மாத காலத்தில் கட்டுமானச் செலவு அதிகரிப்பும் பணவீக்க உயர்வும் வட்டிவிகித உயர்வும் ஆபத்தான அம்சங்களாக இருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக கருதுகிறார்கள்.
உலகப் பொருளியலில் மெதுவான போக்கு இருக்கிறது என்றும் இதுவும் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கலாம் என்றும் தெரிவித்தோர், முந்திய ஆய்வைவிட இந்த ஆண்டில் அதிகம்.

