இந்த முழு ஆண்டுக்குமான அதிகாரபூர்வமான சிங்கப்பூரின் வர்த்தகக் கணிப்புகள் அதிகரித்து உள்ளன. இந்த ஆண்டு முதல் காலாண்டின் செயல்திறன் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பாக இருந்ததே இதற்கான காரணம்.
உலகளவில் எண்ணெய் விலையும் கணினிச் சில்லுகளுக்கான தேவையும் தொடர்ந்து வலுவாக இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 3% முதல் 5% வரை வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், மொத்த பண்டக வர்த்தகம் 8% முதல் 10% வரை கூடும் என்று கணிக்கப்படுவதாக 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகளும் பொருள்களின் மொத்த வர்த்தகமும் பூஜ்ஜியம் விழுக்காடு முதல் 2% வரை வளரும் என்று சென்ற பிப்ரவரியில் கணிக்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது அந்தக் கணிப்பு கூட்டப்பட்டு இருக்கிறது.
மொத்த வர்த்தகமும் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதியும் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வளர்ச்சி கண்டுள்ளன.
இதற்கு எண்ணெய் விலை அதிகரித்தது போன்றவை காரணம். அதேவேளையில், உலகளவில் கணினிச் சில்லுகளுக்கான தேவை கூடி வருகிறது. இதனால் இந்த ஆண்டு முழுவதும் மின்னணுப் பொருள்களும் அவற்றுடன் தொடர்புடைய இயந்திரங்களும் அதிகமாக ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 11.4% கூடி இருக்கின்றன.
இதற்கு மின்னணு மற்றும் மின்னணுச் சாராத துறைகளில் காணப்பட்ட வளர்ச்சி காரணம். மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி முதல் காலாண்டில் 12.3% அதிகரித்து இருக்கிறது.
இந்த அதிகரிப்பு தொடர்ந்து எட்டு மாத காலமாக இடம்பெற்று வருகிறது. மின்னணு சாராத உள்நாட்டு ஏற்றுமதிகள் 11.1% கூடின.
எண்ணெய் சாராத உள்நாட்டு ஏற்றுமதிகளுக்கான சிங்கப்பூரின் முக்கிய 10 சந்தைகளிலும் மொத்தமாக முதல் காலாண்டில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.
ஆனாலும் ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து நாடுகளுக்கான ஏற்றுமதிகள் குறைந்து இருந்தன.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் பார்க்கையில், முதல் காலாண்டில் உள்நாட்டு எண்ணெய் ஏற்றுமதி 45.4% வளர்ச்சி கண்டது.
மொத்த பண்டக வர்த்தகம் 20.8% கூடியது.
இதற்கு எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத வர்த்தகம் காரணம்.

