குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒருவகை கல்லீரல் தடிப்பு நோய், கடுமையான இதயக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும். அதன் விளைவாகஒரு வகை புரதம் உற்பத்தி அதிகரித்து கடைசியில் இரத்தக் குழாய்கள் சேதப்பட்டுவிடும். அழன்றுவிடும்.
சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 100 பேரில் 40 பேருக்கு அத்தகைய கல்லீரல் தடிப்பு நோய் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் செய்தி தெரிவிக்கிறது.
அத்தகைய கல்லீரல் நிலவரம் கல்லீரலை மட்டும் பாதிக்காமல் இதயத்தை அதிகம் பாதிக்க வேண்டிய அவசியம் என்ன, காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க அறிவியல் வல்லுநர்கள் 2018ஆம் ஆண்டில் ஆய்வு ஒன்றைத் தொடங்கினர்.
அந்த ஆய்வுக் குழுவினர் தாங்கள் கண்டறிந்தவற்றை ஏப்ரல் மாதம் 'எம்போ ரிப்போர்ட்' என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிட்டனர். கல்லீரல் தடிப்பு நோய் உள்ள 99 நோயாளிகளும் உடல் நலத்துடன்கூடிய 56 பேரும் கொடையாகக் கொடுத்த உயிரணுக்களைக் கொண்டு இரத்தக் குழாய் உயிரணுக்களை அந்தக் குழுவினர் உருவாக்கினர்.
கல்லீரல் தடிப்பு நோயாளிகளின் இரத்தக் குழாய் உயிரணுக்களில் 'கீமோகைன்ஸ்' என்ற ஒரு வகை புரதம் மூன்று மடங்கு அதிகம் இருந்தது. கீமோகைன்ஸ் என்பவை சிறிய அளவிலான புரத மூலக்கூறுகள். இந்தப் புரதம், நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்ட உயிரணுக்களைக் கவரக்கூடியது. அத்தகைய அணுக்களை உடலில் நோய் தொற்றி இருக்கும் இடங்களுக்கு அனுப்பும் பணியை இந்தப் புரதம் செய்கிறது.
ஆனால் இரத்தக் குழாய்களில் அளவுக்கு அதிகமாக நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் இருந்தால் அது ஒருவரைப் பாதித்துவிடும்.
இதன் விளைவாக இரத்தம் உறையக்கூடிய வாய்ப்பு உண்டு. இரத்த ஓட்டம் தடைபடலாம். மிக முக்கியமான உறுப்புகளுக்கு இரத்தம் போகாமல் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டு.
கல்லீரல் தடிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்போருக்கு இப்போது அதைக் குணப்படுத்த சிகிச்சை எதுவும் இல்லை.
இருந்தாலும் அத்தகைய நோயை முன்னதாகவே கண்டறிந்தால் விரைவாகச் செயல்பட்டு இதய நலனை மேம்படுத்த வழி உண்டு என்று ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
கல்லீரல் தடிப்பு நோய் என்பது உலகம் முழுவதுமே ஒரு கவலை தரும் நிலவரமாக இருக்கிறது.
சிங்கப்பூரில் மூன்று பேரில் ஒருவருக்கு அடுத்த 10 ஆண்டுகளில் மதுபானம் சாராத கல்லீரல் தடிப்பு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் கிறிஸ்டின் சியுங் தெரிவித்தார். இவர்தான் ஆய்வுக் குழுவின் தலைவர்.
அத்தகைய நோயாளிகளுக்கு இதய நோய் உருவாகக்கூடிய ஆபத்து அதிகம். ஆனாலும் கல்லீரல் நோய்களைப் பொறுத்தவரை முன்கூட்டியே நோய்களைக் கண்டறிந்துகொண்டால் அவற்றை நூற்றுக்குநூறு சரிபடுத்திவிடலாம் என்று அவர் தெரிவித்தார்.

