சிங்கப்பூரின் சேவைத்துறை ஏற்றுமதிகள் 2022ல் தொடர்ந்து விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் உலகளவில் தேவைகள் அதிகரிப்பதும் இதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டில் சார்ஸ் தொற்று ஏற்பட்டது. 2008ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போதைய காலத்துடன் ஒப்பிடுகையில், சேவைத் துறை ஏற்றுமதிகள், கொவிட்-19க்கு முன்பு இருந்த அளவை எட்டுவதற்கு இப்போது கொஞ்ச அதிக காலம் பிடிக்கும் என்று தெரிகிறது.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் சேவைத் துறை ஏற்றுமதி 2022 முதல் காலாண்டில் 7.1 விழுக்காடு வளர்ந்துள்ளதாக 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு நேற்று அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியது.
ஒட்டுமொத்தமாக, 2021ல் சேவைத் துறை ஏற்றுமதிகள் கூடின. 2020ஆம் ஆண்டில் அந்தத் துறை 1.6% குறைந்தது. ஆனால் அடுத்த ஆண்டு அது 6.7% வளர்ச்சி கண்டது.
இதனிடையே, சிங்கப்பூரின் சேவைத் துறை ஏற்றுமதிகளில் கொவிட்-19 தொற்று எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரிக்கும் பல தகவல்களும் வர்த்தக தொழில் அமைச்சு வெளியிட்ட காலாண்டு பொருளியல் ஆய்வு அறிக்கையில் இடம்பெற்று இருக்கின்றன.
கடந்த கால நெருக்கடிகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் சேவைத் துறை ஏற்றுமதிகளில் கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்பு அளவிலும் அதிகம் என்று வர்த்தக தொழில் அமைச்சு வெளியிட்ட காலாண்டு பொருளியல் அறிக்கை கூறியது.
அதிக காலமும் அந்தப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை அந்த அறிக்கை சுட்டியது.

