இம்மாத இறுதிவரை வெயில் கொளுத்தும் என்றும் செப்டம்பர் மாதம்வரை வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெப்பம் சார்ந்த உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
குளிரான மாதங்களைவிட வெப்பமான மாதங்களில், வெம்மை சார்ந்த காயங்களுக்காக கூ டெக் புவாட் மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக இருப்பதாக அந்த மருத்துவமனையின் தீவிர நோய், அவசரகாலப் பராமரிப்புப் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் கனக் நாயுடு கூறினார்.
வெப்பத்தால் ஏற்படும் தடிப்பு, தசைவலி, சோர்வு, சொறி, கடும் வெப்பத்தாலும் நீர்ச்சத்துக் குறைவாலும் ஏற்படக்கூடிய சொறி, படை போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெளிப்புறங்களில் வேலை செய்வோர் தலைவலி, உடற்சோர்வு, உடல்வலி, தலைச்சுற்றல், கவனக்குறைவு போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்று ராஃபிள்ஸ் மருத்துவ நிலையத்தின் டாக்டர் டெரிக் லீ சொன்னார்.
"ஆனாலும், வெப்பம் மட்டுமே இந்த அறிகுறிகளுக்குக் காரணம் என்று கூறுவது கடினம். கொவிட்-19 தொற்றும் டெங்கி காய்ச்சலும் சமூகத்தில் இருக்கும்போது, இவை அனைத்தும் அதுபோன்ற அறிகுறிகளுக்குக் காரணமாக இருக்கலாம்," என்றார் டாக்டர் லீ.
பெரிய அளவிலான விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கி இருப்பதாலும், அடுத்த சில வாரங்களில் வெப்பம் சார்ந்த பாதிப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை உச்ச அளவில் பதிவானது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, அட்மிரல்டியில் இரண்டாவது அதிகபட்ச அளவாக 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 1983 ஏப்ரல் 17ஆம் தேதி தெங்காவில் 37 டிகிரி செல்சியஸ் பதிவானதே சிங்கப்பூரின் அதிகபட்ச வெப்பநிலை.
அதுபோல, இதற்குமுன் மே மாதத்தில் இல்லாத அளவாக இம்மாதம் 13ஆம் தேதி அட்மிரல்டியில் 36.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வெப்பத்தின் தாக்கத்தைத் தவிர்க்க: தளர்வான, மெல்லிய, ஈரம் உறிஞ்சும் ஆடைகளையும் தொப்பியையும் அணியலாம். காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 4 மணிவரை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம். நாளொன்றுக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் நீர் அருந்துங்கள். முடிந்த அளவிற்குச் சூடான உணவுகளையும் பானங்களையும் தவிர்க்கலாம். அதேபோல, அதிகச் சர்க்கரையும் மது அளவும் அதிகம் உள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும்.