சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றோரில் கூடுதலானோர் வாக்குச் சாவடிக்கு நேரடியாகச் செல்லாமலே வாக்களிக்க அனுமதிப்பது தொடர்பில் திட்டமிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதிமை இல்லங்களில் இருப்போர் படுக்கையில் இருந்தவாறே வாக்களிக்க அனுமதிப்பது, வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் அஞ்சல்வழி வாக்களிக்க அனுமதிப்பது போன்ற மாற்றங்களைத் தேர்தல் துறை பரிந்துரைத்துள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிப்பு நடைமுறையை எளிதாக்குவது இதன் நோக்கம்.
அரசியல் கட்சிகள், தாதிமை இல்லங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் ஆகியோருடன் இதன் தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என்று தேர்தல் துறை நேற்று தெரிவித்தது. ஆலோசனை முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்.
கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு, 2020ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது வாக்களிப்பு நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டதுடன் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டோர் அங்கிருந்தபடியே வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதேபோன்று அடுத்த ஆண்டின் அதிபர் தேர்தலில் தாதிமை இல்லங்களில் இருந்தபடியே மூத்தோரை வாக்களிக்க அனுமதிக்கத் திட்டமிடப்படுவதாக தேர்தல் துறை தெரிவித்தது.
சிங்கப்பூரில் ஏறக்குறைய 80 தாதிமை இல்லங்கள் உள்ளன. அவற்றில் 13,000 பேர் பராமரிக்கப்படுகின்றனர்.
தாதிமை இல்லங்களில் பொதுவான ஓரிடத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்படும்; அங்குள்ள மூத்தோரில் நடமாடும் நிலையில் உள்ளவர்கள் அதில் சென்று வழக்கமான வாக்குச் சாவடியின் நடைமுறையைப் பின்பற்றி வாக்களிக்கலாம்.
படுத்த படுக்கையாய் இருப்போருக்கு வாக்குச் சீட்டும் வாக்குப் பெட்டியும் ஒவ்வொரு படுக்கைக்கும் எடுத்துச் செல்லப்படும்.
அரசியல் கட்சிகளையும் தாதிமை இல்ல நிர்வாகத்தினரையும் கலந்தாலோசித்த பிறகு இதன் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் துறை கூறியது.
தாதிமை இல்லங்களில் பராமரிக்கப்படுவோரின் உடல் நிலை, மன நிலையைப் பொறுத்து அவர்களின் தேவைகள் மாறுபடும் என்பதால் சில நேரங்களில் தாதிமை இல்ல ஊழியர்கள் அவர்களுக்கு வாக்களிப்பில் உதவ நேரிடும்.
எனவே வாக்களிப்பில் உதவுவோர் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பன குறித்த விதிமுறைகளைத் தேர்தல் துறை வெளியிடும். உதாரணத்திற்கு ஊழியர்கள் வாக்குச் சீட்டில் வாக்கைப் பதிவுசெய்ய அனுமதி இல்லை.
கொவிட்-19 கிருமிப் பரவலின்போது பயணக் கட்டுப்பாடுகளால் வெளிநாடுகளில் வாழ்ந்த சிங்கப்பூரர்கள் பலரால் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல இயலவில்லை. வாக்களிக்க பதிந்துகொண்ட 6,750 பேரில் 4,794 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
எனவே அஞ்சல்வழி வாக்களிப்பது தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அனுபவங்களை ஆய்வு செய்ததாகவும், வாக்குச் சீட்டுகளையும் அவற்றுக்கான உறைகளையும் மின்னியல் முறையில் வழங்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தேர்தல் துறை குறிப்பிட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் வாக்காளர்கள் 'சிங்பாஸ்' கணக்கைப் பயன்படுத்தி அவற்றைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பின்னர் அவர்களே அவற்றை அச்சிட்டு வாக்களிக்கலாம். உறையில் கையெழுத்திட்டு தேர்தல் துறைக்கு அவர்கள் அனுப்பிவைக்க வேண்டும்.
வாக்களிப்பு நாளுக்குப் பிறகான தேதியை அஞ்சல் முத்திரையில் கொண்டுள்ள உறைகள் நிராகரிக்கப்படும்.
அத்துடன் வாக்களிப்பு நாளில் இருந்து 10 நாள்களுக்குள் அவை சிங்கப்பூரை வந்தடைவதும் அவசியம்.
பரிந்துரைக்கப்படும் ஏற்பாடுகள் குறித்துக் கருத்துரைக்க விரும்பும் சிங்கப்பூரர்கள் 'contact@eld.gov.sg' என்ற மின்னஞ்சல் முகவரியில் தேர்தல் துறையுடன் தொடர்பு கொள்ளலாம்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் தொடர்பில் தேர்தல் துறை அறிவிப்பு

