செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
288659bd-3553-4f67-9ce9-2bd1a639ebab
-

துன்புறுத்திய தாயாரின் சிகிச்சைத் தகுதி அறிக்கைக்கு உத்தரவு

14 வயது மகனை கத்தரிக்கோலால் பல முறை தாக்கியதுடன் அவனது விரலை நறுக்கப் போவதாக மிரட்டிய தாயாரின் மனநல சிகிச்சைத் தகுதி அறிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவர் விவாகரத்து பெற்று வாழ்பவர் என்றும் குற்றச்செயல்களைச் செய்தபோது 'ஸ்கிட்சோஃபிரினியா' எனும் மூளையின் செயல்பாடுகளைப் பாதிக்கும் மனக் கோளாற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆதரவற்ற அவருக்கு கட்டாய சிகிச்சை உத்தரவு பிறப்பிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

43 வயதான அந்தத் தாயார் சிறைத்தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பதில் மனநல, மறுவாழ்வு சிகிச்சை பெற இது வழிவகுக்கும். அவருக்கு 15, 12 வயதில் இரு மகள்களும் உள்ளனர்.

பணிப்பெண்ணைத் துன்புறுத்திய முதலாளிக்குச் சிறைத்தண்டனை

வேலையில் இருந்து விலக நினைப்பதாகப் பணிப்பெண் கூறியதால் சினமடைந்த மாது ஒருவர் அவரை அடித்து, உதைத்ததுடன் அது தொடர்பான கண்காணிப்புக் கேமராப் பதிவையும் அழிக்க முயற்சி செய்ததற்காக அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2020 நவம்பரில் மியன்மாரைச் சேர்ந்த பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதற்காக சீன நாட்டவரான 34 வயது பாய் இஹோங்கிற்கு எட்டு மாதச் சிறைத்தண்டனையும் சம்பவம் தொடர்பான கேமராப் பதிவுகளை அழிக்க முயன்றதற்காக ஆறு வாரச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் வேலைசெய்த அந்தப் பணிப்பெண்ணை பாய் துன்புறுத்தியது இது முதல்முறை அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

குளியலறையில் படமெடுத்த ஆடவருக்கு 12 வாரச் சிறை

மலேசியரான 28 வயது ஷஸ்ருல் ஹஃபீஸ் சப்ரி சோங்குக்கு, தன்னுடன் அடுக்குமாடி வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த பெண்களைக் குளியலறையில் படமெடுத்ததற்காக 12 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுளது.

பாதிக்கப்பட்டோரின் விவரங்களையும் வீடு அமைந்திருக்கும் இடத்தையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஷஸ்ருல் ஹஃபீஸ் வீட்டின் குளியலறையில் சிறிய ரக கேமராவைப் பொருத்தினார். 2020 செப்டம்பரில் வாடகைக்கு குடியிருந்த பெண் குளியலறையின் தரையில் அந்த கேமராவைக் கண்டுபிடித்தார்.

பின்னர் அவர் காவல்துறையிடம் புகாரளித்ததாகக் கூறப்பட்டது.

விசாரணையில் வேறொரு பெண்ணையும் அவர் ஆபாசமாகப் படமெடுத்தது கண்டறியப்பட்டது.