சட்டவிரோதமாக ஈட்டிய ஐந்து மில்லியன் வெள்ளி பணத்துடன் பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றை ஒளித்துவைக்கும்படி தனது ஊழியரிடம் கூறிய நிறுவன இயக்குநருக்கு ஒரு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது உறவினர் அப்துல் லத்தீப் இப்ராஹிமிற்குச் சொந்தமான அந்தப் பணத்தைத் தேடிக் காவல்துறையினர் வரக்கூடும் என்ற அச்சத்தில் அவ்வாறு ஒளித்து வைத்ததையும் அதன்மூலம் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருந்ததையும் 33 வயது முகமது ஹஃபீஸ் இஸ்மாயில் ஒப்புக்கொண்டார்.
அப்துல் லத்தீப் இந்தப் பணத்தைச் சட்டவிரோதமாக ஈட்டியதும் இது புக்கோம் தீவில் 'ஷெல் ஈஸ்டர்ன் பெட்ரோலியம்' நிறுவன மோசடியுடன் தொடர்புடைய பணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு லத்தீப் இந்தப் பாதுகாப்புப் பெட்டகத்தை ஹஃபீஸின் நிறுவனம் செயல்பட்ட இடத்துக்கு மாற்றினார். பின்னர் 2018ல் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து லத்தீப்பின் வாகனம் ஒன்று எங்கிருக்கிறது என்று கண்டறிய காவல்துறை ஹஃபீசுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டது.
இதன்மூலம் லத்தீப் கைது செய்யப்பட்டதைத் தெரிந்துகொண்ட ஹஃபீஸ் தனது நிறுவனத்தின் சக இயக்குநரின் உதவியுடன் அப்துல் லத்தீப்பின் பெட்டகத்தை காக்கி புக்கெட்டில் உள்ள ஓர் இடத்துக்கு மாற்றிவிட்டார்.
அதிகாரிகள் அதனைக் கைப்பற்றியபோது அதில் $334,200 ரொக்கமும் 100 கிராம் எடையுள்ள தங்கநிறக் கட்டி ஒன்றும் இருந்தன. விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

