துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் கிட்டத்தட்ட 3,200 மின்சிகரெட்டுகளையும் 17,000க்கும் அதிகமான மறுநிரப்பு கலன்களையும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இம்மாதம் 9ஆம் தேதியும் 13ஆம் தேதியும் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட மூன்று லாரிகளில் இவை மறைத்துக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிடிபட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 130,000 வெள்ளிக்கும் மேல் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் சுகாதார, அறிவியல் ஆணையமும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துவாஸ் சோதனைச் சாவடியில் இம்மாதம் 9ஆம் தேதி 8,520 மின்சிகரெட் மறுநிரப்பு கலன்களை சிங்கப்பூருக்குக் கடத்தும் முயற்சியை அதிகாரிகள் முறியடித்தனர்.
மே 13ஆம் தேதி துவாஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிகளில் இருவேறு சம்பவங்களில் 3,200 மின்-சிகரெட்டுகளையும் 8,700 மறுநிரப்பு கலன்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
27 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட மலேசிய ஆடவர் நால்வர் விசாரணையில் உதவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

