முக்கியமான மறைச்சொற்களை அமைக்கும்போது 'சிங்லிஷ்' வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் இணையக் குற்றவாளிகள் அவற்றைக் கண்டுபிடித்து ஊடுருவுவது கடினமாகும் என்று கருத்துரைக்கப்பட்டுள்ளது.
இணையப் பாதுகாப்பு அமைப்பின் ஆய்வுப் பிரிவான தேசிய இணைய மிரட்டல் ஆய்வு நிலையத்தின் இயக்குநர் வில்லிஸ் லிம் இவ்வாறு கூறியுள்ளார்.
சிங்கப்பூரிலும் உலகெங்கும் இடம்பெற்ற நவீன மோசடிச் சம்பவங்களின் தொடர்பில் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் படைக்கும் சிறப்பு 'ஸ்டாப் ஸ்கேம்ஸ் பாட்காஸ்ட்' தொடரில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பெரும்பாலான அகராதிகளில் 'சிங்லிஷ்' சொற்களுக்கான பொருள் இருக்காது என்பதைச் சுட்டிய திரு லிம், அதனால் இணையக் குற்றவாளிகள் இத்தகைய மறைச்சொற்களை உடைத்து ஊடுருவச் சிரமப்படுவர் என்றார்.
இத்தகைய தொழில்நுட்ப மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான உத்திகளையும் அவர் பகிர்ந்துகொண்டார். இணையக் குற்றவாளிகள் எவ்வாறு தங்கள் இலக்குகளை அடையாளம் காண்கிறார்கள் என்பது குறித்தும் இந்த ஆண்டில் இடம்பெற்ற புதிய வகை மோசடிச் சம்பவங்கள் குறித்தும் அவர் பேசினார்.
https://str.sg/wnBi என்ற இணைய முகவரியில் இந்த 'பாட்காஸ்ட்' தொடரைக் கேட்கலாம்.

