நிதி திரட்டு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை
தற்போதைய நிலவரப்படி பொதுமக்களிடம் நிதி திரட்ட விரும்பும் அறநிறுவனங்கள் காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையை ரத்து செய்யக் கோரி அறநிறுவனங்கள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
காவல்துறையிடம் அனுமதி கேட்பதற்குப் பதிலாக நிதி திரட்டுவதைத் தொடங்குவதற்குக் குறைந்தது ஒரு மாதத்துக்கு முன்பு ஆணையத்தின் இணையத்தளத்தில் நிதித் திரட்டல் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தலாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. நிதி திரட்டலுக்கான நோக்கம், கால அளவு, நிதி திரட்டும் முறை, சம்பந்தப்பட்ட அறநிறுவனத்தின் தனிப்பட்ட விவரங்கள் அவற்றில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு
சிங்கப்பூரின் உற்பத்தி கடந்த மாதம் தொடர்ந்து ஏழாவது மாதமாக அதிகரித்தது. பகுதிமின்கடத்திக்கான தேவை, வான்வெளித் துறை பிரிவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆகியவற்றால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொழிற்சாலை உற்பத்தி கடந்த மாதம் 6.2 விழுக்காடு ஏற்றம் கண்டதாகப் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது.
பொதுமக்களுக்கு சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை
ஆண்மை தொடர்பான பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தைக் கொண்ட காப்பி ஒன்றைப் பருகிய ஆடவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆண்மையை மேம்படுத்துவதாகக் கூறி விற்பனை செய்யப்படும் 'பிரைம் கோப்பி பெஜுவாங்'கை உட்கொள்ள வேண்டாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தேசிய சேவையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அழைப்பு
தேசிய சேவையின் 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய சேவையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க டிக்டோக் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ள நடனத்தை அவர்கள்
டிக்டோக்கில் செய்து காட்ட வேண்டும்.

